யாழ் கோட்டையை அண்மித்த பகுதியில் தகனம் செய்ய யாழ் நீதவான் நீதிமன்றம் அனுமதி!

229 0

மறைந்த யாழ் நாக விகாரை விகாராதிபதியின் பூதவுடலை யாழ் கோட்டையை அண்மித்த பகுதியில் தகனம் செய்ய யாழ் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

கடந்த 19ம் திகதி புகழ் பெற்ற யாழ் ஆரியகுளம் நாக விகாரையின் பிரதான தேரரான மூத்த விகாராதிபதி மீகாயதுரே ஞானரத்ன தேரர் கொழும்பு ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையில் வைத்து இயற்கை எய்தினார்.

இவருடைய பூதவுடலை யாழ். வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாகவுள்ள தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான இடத்தில் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த தகனச்சடங்கை நிறுத்துமாறு கோரி யாழ். நீதவான் நீதிமன்றில் வரதராஜன் பார்த்தீபன் மற்றும் கமலக்கண்ணன் ஆகிய இருவர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த மனு இன்று நண்பகல் நீதவான் எஸ். சதீஸ்கரன் முன்னிலையில் நீதவான் அறையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், சட்டத்தரணிகள் சார்பிர் வட பிராந்திய சட்டத்தரணிகள் சங்க தலைவி சாந்த அபிமன்ன சிங்கம் தலைமையில் பன்னிரெண்டு சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகி தமது தரப்பு நியாயங்களை முன்வைத்தனர்.

பிரதிவாதிகள் சார்பில் யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ் பிராந்திய பொலிஸ் அதிகாரி ஆகியோர் மன்றில் ஆஜராகினர்.

இருதரப்பினரின் வாதங்களையும் ஆராய்ந்த நீதவான் குறித்த உடலை அந்த இடத்தில் தகனம் செய்வதற்கு அனுமதி வழங்கியதுடன் தடைக்கான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Leave a comment