கனடாவில் உடல் குறைபாடுகள் உள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில் அறக்கட்டளை ஒன்றை நடத்திவருகிறார் விஜிதா தர்மலிங்கம் என்னும் இலங்கை பெண்.
1992 ஆம் ஆண்டு விஜிதா தர்மலிங்கம் இலங்கையில் இருந்து தனது குடும்பத்துடன் கனடாவில் குடியேறியுள்ளார். ஆரம்பத்தில் பல்வேறு துன்பங்களை அனுபவித்த விஜிதா தன்னைப்போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ எண்ணி தமிழ் மொழியின் மூலம் தனது சேவையை செய்யும் முகமாக “அன்னை தந்த இல்லம்” என்ற அறக்கட்டளையை ஆரம்பித்து நடத்திவருகிறார்.
1987 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் உச்சக்கட்டத்தில் தர்மலிங்கத்தின் வீடு போர் வலயத்தில் சிக்கிக்கொண்டது. இதன்போது விஜிதா மற்றும் அவரது கணவர் இரண்டு பிள்ளைகளுடன் தப்பித்துச் செல்ல முயற்சித்துள்ளனர். தப்பித்துச் செல்லும்போது கர்ப்பமாக இருந்த விஜிதா விபத்துக்கு உள்ளாகினார். விபத்தில் இருந்து மீண்டு வந்து விஜிதா மீராவை பெற்றெடுத்தார்.
எனினும் மீராவின் மூளை பாதிக்கப்பட்டிருந்தது. மூளை பாதிக்கப்பட்ட மகளை ஆதரவற்ற இல்லத்தில் விடுமாறு பல உறவினர்கள் விஜிதாவிடம் கூறியுள்ள நிலையில் அவர் தனது மகளிற்கு நல்ல ஒரு எதிர்காலத்தை வழங்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.
விஜிதா தனது மகள் போன்று பாதிக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கு உதவும் நோக்குடன் 2014 ஆம் ஆண்டு குறித்த அறக்கட்டளையை ஆரம்பித்துள்ளார். அதன் மூலமாக பல கனேடி தமிழ் சமூகத்தினர் பயன் அடைந்து வருவதாக கனேடிய ஊடகங்கள் தெரிவித்துள்ளதுடன் அவரை பாராட்டி வருகின்றன.

