பொன்னாலைக் கடலில் திருடியவர் தொழிலாளர்களால் மடக்கிப்பிடிப்பு

222 0

பொன்னாலைக் கடலில் தொழிலாளர்களின் வலைகளில் இருந்து கடல் உணவுகளைத் திருடிய நபர் ஒருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டு வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இச்சம்பவம் இன்று (21) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றது.

கடல் உணவுகளைத் திருடிய நபர் சுழிபுரத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொன்னாலைக் கடலில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கூட்டுவலைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல லட்சம் ரூபாய்களைச் செலவுசெய்து வலைகள் உள்ளிட்ட கடற்றொழில் உபகரணங்களைக் கொள்வனவு செய்து கூட்டு வலைகளைத் தயார் செய்து கடலில் வைத்து அதன் மூலம் நாள்தோறும் சிலநூறு ரூபாய்களை வருமானமாகப் பெற்றுக்கொள்கின்றனர்.

இந்நிலையில், அண்மைக் காலமாக இந்த வலைகளில் இருந்து இரவு நேரங்களில் கடல் உணவுகள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் அவர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மழையையும் பொருட்படுத்தாமல் தொழிலாளர்கள் கடலில் இரவுநேரக் காவல் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றும் காவல் கடமையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குறித்த நபர் வலைகளில் இருந்து கடல் உணவுகளைத் திருடியதை அவதானித்து அவரை கையும்மெய்யுமாக மடக்கிப் பிடித்தனர்.

இது தொடர்பாக அருகில் இருந்த வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

சுமார் ஒரு மணிநேரம் தாமதமாக வந்த பொலிஸார் குறித்த நபரைப் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றதுடன், அவரைப் பிடித்த தொழிலாளர்களை பொலிஸ் முறைப்பாடு ஒன்றைப் பதிவுசெய்யுமாறும் கேட்டுக்கொண்டனர்.

இதேவேளை, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரில் தமிழ் மொழி தெரிந்த பொலிஸார் இன்மையால் பெரும் சிரமங்கள் எதிர்நோக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment