பரீட்சை விதிமுறைகளை மீறுவோருக்கெதிராக கடுமையான சட்டம் – கல்வி அமைச்சர்

360 0

பரீட்சை விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் மூலம் பரீட்சை ஆணையாளர் மற்றும் பொலிஸாருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை நடவடிக்கைகளை சரியாக மேற்கொள்ளும் மாணவர்களுக்கு நீதியை நிலை நாட்டும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, பரீட்சை விதிமுறைகளை மீறும் குறித்த மாணவர்களுக்கு பரீட்சை சட்டத்திற்கு மேலதிகமாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மூலமும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

நடைபெற்று வருகின்ற க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் அனுராதபுரம் பாடசாலை ஒன்றின் மாணவர் ஒருவர் கைத்தொலைபேசியை பயன்படுத்தி பரீட்சை எழுதியமை தொடர்பில் குறித்த மாணவனின் பரீட்சை அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் அனுராதபுரம் மாவட்ட கல்வி பணிப்பாளரின் முறைப்பாட்டுக்கமைய குறித்த மாணவனுக்கெதிராக அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கொழும்பு இசிபதன கல்லூரியில் மாணவர் ஒருவர் கைத்தொலைபேசியை பயன்படுத்தி பரீட்சை எழுதியமை தொடர்பில் பிரதி தேர்தல் ஆணையாளர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment