மேட்டூரில் தண்ணீரில் மூழ்கி 4 மாணவர்கள் பலி

364 0

மேட்டூரில் தண்ணீரில் மூழ்கி 4 மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் கேம்ப் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 17). இவரும், அதே பகுதியை சேர்ந்த மணி மகன் மோகன்ராஜ் (7), தனபால் மகன்கள் ராஜா (10), தமிழ் அழகன்(8) ஆகிய 4 பேரும் நேற்று மதியம் திடீரென மாயமானார்கள்.

இவர்கள் 4 பேரும் கேம்ப் பகுதியில் உள்ள தனியார் மற்றும் அரசு உயர் நிலைப்பள்ளியில் படித்து வந்தனர். இதனால் அவர்கள் பள்ளி வளாகத்தில் விளையாட சென்றிருக்கலாம் என நினைத்து பெற்றோர் பள்ளி வளாகத்தில் சென்று தேடினர். அங்கு 4 பேரும் இல்லை.

அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர்களிடம் விசாரித்தபோது, மணிகண்டன், மோகன்ராஜ், ராஜா, தமிழ் அழகன் ஆகியோர் இங்கு வரவில்லை என தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகன்களை அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் தேடினர். ஆனால் அங்கும் அவர்கள் இல்லை. இந்த தகவல் கிராமம் முழுவதும் காட்டு தீ போல் பரவியது. ஊர் மக்கள், உறவினர்கள் ஒன்று திரண்டு கேம்ப் பகுதியில் உள்ள மலைகளில் தேடினார்கள். ஆனால் மாணவர்கள் 4 பேரும் அங்கும் காணவில்லை.

இதனை தொடர்ந்து செல்போனில் தொடர்பு கொண்டு நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்களது மகன்கள் வந்தார்களா? என பெற்றோர் விசாரித்தனர். அவர்களும், இங்கு வரவில்லை என தெரிவித்தனர்.

ஒரே நாளில் 4 மாணவர்கள் மாயமான சம்பவம் கேம்ப் பகுதி மக்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியது. இன்று காலையில் மகன்கள் எப்படியும் வீட்டிற்கு திரும்பி வந்து விடுவார்கள் என நினைத்து பெற்றோர் காத்திருந்தனர்.

இந்த நிலையில் மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண்பாலம் வழியாக தண்ணீர் வழிந்தோடும் பாதையில் மாடி லைன் பின்புறம் உள்ள குட்டையில் இருந்த நீரில் மூழ்கி மாணவர்கள் மோகன்ராஜ், மணிகண்டன், சகோதரர்கள் ராஜா, தமிழ் அழகன் ஆகிய 4 பேரும் பிணமாக மிதந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் கருமலைக் கூடல் போலீசார் மற்றும் மேட்டூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று குட்டையில் இருந்து 4 பேர் உடலையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

கரையில் நின்ற பெற்றோர் தங்களுடைய மகன்களை மடியில் தூக்கி வைத்து கதறி அழுதனர். மகன்களே எங்களை விட்டு சென்று விட்டீர்களே… உங்களது முகத்தை இனிமேல் நாங்கள் எப்போது பார்ப்போம்…அய்யோ .. என கதறி அழுததை பார்க்கும்போது உருக்கமாக இருந்தது. மேலும் அங்கு உறவினர்களும் திரண்டு கதறி அழுதனர்.

உயிரிழந்த மணிகண்டன் பெற்றோருக்கு ஒரே மகன் ஆவார். அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுததை பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது. மணிகண்டன் விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கு செல்வது வழக்கம். அதில் கிடைக்கும் பணத்தை செலவுக்கு வீட்டில் அப்படியே கொடுத்து விடுவார். நேற்று விடுமுறை நாளில் வேலை எதுவும் கிடைக்கவில்லை. இதனால் நண்பர்களுடன் மணிகண்டன் வெளியே சென்றார்.

அதுபோல் பலியான மாணவர்கள் ராஜா, தமிழ் அழகன் ஆகியோர் அண்ணன், தம்பிகள் ஆவார்கள். 2 மகன்கள் மீதும் பெற்றோர் மிகுந்த பாசம் வைத்திருந்தனர். வெளியே எங்கு சென்றாலும் தம்பி தமிழ் அழகனை அழைத்து செல்ல வேண்டும். அவனை தனியாக விட்டு விடக் கூடாது என பெற்றோர் மூத்த மகன் ராஜாவிடம் கூறியிருந்தனர். அதன்படி ராஜா தனது தம்பியை எங்கு சென்றாலும் அழைத்து செல்வார். அது போல் நேற்று தம்பி தமிழ் அழகனை வீட்டில் தனியாக விட்டு விடக் கூடாது. தன்னுடன் அழைத்து சென்றால் சந்தோசமாக விளையாடி கொண்டிருப்பான் என கருதி வெளியே அழைத்து சென்றது தெரியவந்தது.

உயிரிழந்த மாணவன் ராஜா 6-ம் வகுப்பும், தமிழ் அழகன் 4-ம் வகுப்பும், மோகன்ராஜ் 2-ம் வகுப்பும் படித்து வந்தனர். இதில் மோகன்ராஜ் சபரிமலை அய்யப்பன் சுவாமி கோவிலுக்கு செல்ல வேண்டி மாலை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

4 மாணவர்களின் உடல்களையும் மேட்டூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனை வளாகத்திலும் கேம்ப் பகுதி மக்கள் கூடினர். அங்கு அழுகுரலாக இருப்பதால் மருத்துவமனை வளாகமும் சோகமாயமாக காணப்படுகிறது.

போலீசார் கூறுகையில், மேட்டூர் 16 கண் பாலம் வழியாக வழிந்தோடும் தண்ணீர் மாடி லைன் பின்புறம் வழியாக செல்கிறது. தற்போது அணையில் தண்ணீர் குறைவாக உள்ளதால் 16 கண் பாலம் வழியாக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படவில்லை. ஏற்கனவே வழிந்தோடிய தண்ணீர் மற்றும் மழைநீர் மாடி லைன் பின்புறத்தில் குட்டை போல் தேங்கி நின்றது. இதில் 4 சிறுவர்களும் ஓடி குதித்து விளையாடி இருக்கலாம் என தெரிகிறது. அப்போது ஆழமான பகுதியில் சிக்கி உள்ளனர். அவர்களை காப்பாற்ற முயன்றபோது ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் முதற்கட்டமாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

Leave a comment