வயிற்றில் மறைத்து ரூ.5 கோடி போதை பொருளை கடத்தி வந்த வெனிசுலா வாலிபர் சிக்கினார்

412 0

‘அயன்’ பட பாணியில் வயிற்றில் மறைத்து ரூ.5 கோடி மதிப்பிலான போதை பொருள் கடத்தி வந்த வெனிசுலா நாட்டு வாலிபர் கொச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் கொச்சியில் உள்ளது நெடும்பாஞ்சேரி சர்வதேச விமான நிலையம். இங்கு நேற்று வெனிசுலா நாட்டை சேர்ந்த இளைஞர் வந்தார். விமான நிலைய அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வாலிபரின் நடையில் வித்தியாசம் தெரிந்தது. இதனையடுத்து அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். வாலிபர் வெனிசுலா மொழியில் பேசினார்.

அங்குள்ள அதிகாரிகளுக்கு வெனிசுலா மொழி தெரியவில்லை. இதனால் வெனிசுலா மொழி தெரிந்த மாணவர் ஒருவரை அங்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வாலிபர் பெயர் கார்லி சபரியேல் காஸ்போ (வயது 36) என்பது தெரியவந்தது. மேலும் மயங்க மருத்துகளை வயிற்றுக்குள் வைத்து கடத்தி வருவதாக கூறினார்.

இதனையடுத்து வாலிபரை கலம்பச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அதிகாரிகள் அழைத்துச்சென்றனர். அங்கு வாலிபருக்கு ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் அயன் சினிமா படத்தில் வருவதுபோல் 100 பிளாஸ்டிக் குப்பிகள் இருந்தன. இதனை மலத்துவாரத்தின் மூலம் வெளியேற்றினர்.

சோதனையில் வயிற்றில் கடத்தி வரப்பட்டது 1 கிலோ கோக்கைன் என்னும் போதை பொருள் என்பது தெரியவந்தது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.5 கோடி என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். கொச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டபோது வாலிபர் சிக்கினார்.

வாலிபரை கைது செய்த அதிகாரிகள் மேல் விசாரணைக்காக கொச்சி சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அங்கு அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a comment