பயணிகளின் சிரமத்தைக் குறைக்க மேலதிக பஸ்கள்

350 0

கடந்த 8ம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்க்கும் நோக்குடன் இலங்கை போக்குவரத்துச் சபையினால், நாடளாவிய ரீதியில், விரிவான வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

சாதாரணமாக இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமாக 5700 பஸ்களே சேவையில் ஈடுபடுத்தப்படும்.

ஆனால், இம்முறை மேலதிகமாக 1000 பஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், தற்போது விடுமுறைக் காலம் என்பதால், பாடசாலை சேவையில் ஈடுபடுத்தப்பட்ட 750 பஸ்கள் தூரப் போக்குவரத்துக்காகவும், 60 சொகுசு பஸ்கள் மக்களின் போக்குவரத்துக்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், இவற்றில் பயணிக்கும் பருவகால பயணச் சீட்டுக்களை கொண்ட ரயில் பயணிகளுக்கும் முன்கூட்டியே ரயில்களில் ஆசனங்களை ஒதிக்கியுள்ள பயணிகளுக்கும் கட்டணமின்றி செல்லவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் ரமால் சிறிவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பருவகால பயணச் சீட்டுக்களை கொண்ட ரயில் பயணிகளான பாடசாலை மாணவர்கள், அதனை பயன்படுத்தி தனியார் பஸ்களில் பயணிக்க அனுமதிப்பது குறித்து, அனைத்து தனியார் பஸ் சங்கங்களுக்கும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று முதல் ஆரம்பமாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a comment