“மக்கள் விடுதலை முன்னனியினர், இலஞ்ச ஊழல் மோசடிகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்ட உள்ளோம்” என, மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளுக்கான கட்டுப்பணத்தை, மக்கள் விடுதலை முன்னணியினர் நேற்று (08) செலுத்தியுள்ளனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“யாழ்ப்பாண மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, சாவகச்சேரி பிரதேச சபை மற்றும் வலி.மேற்கு பிரதேச சபை ஆகியவற்றுக்கான கட்டுப்படத்தினை இன்றைய தினம் செலுத்தி உள்ளோம். மேலும் மூன்று சபைகளுக்கான கட்டுப்பணத்தை செலுத்தவுள்ளோம்.
“மக்கள் விடுதலை முன்னனியினர், இலஞ்ச ஊழல் மோசடிகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்ட உள்ளோம். கடந்த காலத்து உள்ளூராட்சி சபைகள் ஊழல் இலஞ்சம் நிறைந்து காணப்பட்டன. அதில் இருந்து உள்ளூராட்சி சபைகளை மீட்டு எடுப்போம்.
“அரசியல் களியாட்டத்தில் கடந்த காலத்தில் நாட்டின் விடுதலைக்காக கொள்கைக்காக போராடினோம் என கூறியவர்கள் இன்று பதவிக்காகவும் கதிரைக்காகவும் தமக்குள்ள மோதிக்கொள்கின்றனர்” எனத் தெரிவித்தார்.

