10-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை: ராமேசுவரத்தில் ரூ. 25 கோடி வர்த்தகம் பாதிப்பு

19955 0

புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை 10-வது நாளாக நீடிக்கிறது. இதனால் ராமேசுவரத்தில் ரூ. 25 கோடி அளவுக்கு மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒக்கி புயலால் கடந்த 28-ந் தேதி முதல் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. இதை யடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்தது.

புயல் காரணமாக 5 நாட்கள் தடை விதிக்கப்பட்ட நிலையில் அந்தமான் தீவு அருகே மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி தற்போது புயலாக மாறியுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இன்று 10-வது நாளாக தடை நீடிக்கிறது.

இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் 1200-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு உள்ளன. மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

தடை காரணமாக ராமேசுவரத்தில் ரூ. 25 கோடி அளவுக்கு மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நகரை, விலாமீன், கணவாய் மீன் உள்ளிட்ட மீன் வகைகள் கிலோ ரூ. 300-க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. இதேபோல் நண்டு, இறால் போன்றவற்றின் விலையும் உயர்ந்துள்ளன.

இதனிடையே வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் ஆந்திர மாநிலத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கும் வகையில் பாம்பனில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Leave a comment