தேர்தல்களில் மலையகப்பெண்களும் உள்வாங்கப்பட வேண்டும் – எம். சச்சிதானந்தன்

387 0

தேர்தல்களில் பெண்களுக்கு 25 சதவீத பிரதிநிதித்துவ ஒதுக்கீடு விடயத்தில் மலையகப் பெருந்தோட்டத்துறைசார் பெண்களும் உள்வாங்கப்பட வேண்டியது அவசியமாகுமென்று ஊவா மாகாண சபை உறுப்பினர் எம். சச்சிதானந்தன் தெரிவித்தார்.

ஊவா மாகாண சபை கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், ஊவா மாகாண சபை உறுப்பினர் எம். சச்சிதானந்தன் கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,

தேர்தல்கள் எதுவென்றாலும் அத்தேர்தல்களில் பெண்களுக்கு 25 சதவீத பிரதிநிதித்துவ ஒதுக்கீடுகள் வழங்கப்படல் வேண்டும். அவ் ஒதுக்கீடுகள் பெரும்பான்மையின பெண்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படக்கூடாது.

மலையக் பெருந்தோட்டத்துறைசார் பெண்களும் 25 சதவீத ஒதுக்கீட்டில் உள்வாங்கப்படல் வேண்டும். அத்துடன், அவர்களை வெற்றி பெறச்செய்யும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படல் வேண்டும். இது விடயத்தை, எமது கட்சியின் செயலாளர் கபீர் ஹாசீமிடமும் உத்தியோகப்பூர்வமாக வலியுறுத்தியுள்ளேன்.

மலையக் பெருந்தோட்டத்துறை சார் பெண்கள், நூற்றுக்கு ஐம்பத்தேழு சதவீதமுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தோட்டத் தொழிலாளர்களாகவும் ஆசிரியைகளாகவும் ஏனைய துறைகளிலும் தொழில் செய்து வருகின்றனர்.

இவர்கள் நாட்டிற்கு பாரிய பங்களிப்புக்களை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். தோட்டங்களில் பெண் தொழிலாளர்களால் இந்நாட்டிற்கு பெருமளவிலான அந்நிய செலாவணியும் ஏற்கனவே கிடைத்து வந்துள்ளது.

தற்போதும், அவர்களினால் இந்நாட்டின் அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்புக்கள் வழங்கப்படுகின்றன. பதுளை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் தமிழ் வாக்காளர்கள் இருந்து வருகின்றனர்.

பெருந்தோட்டங்களிலும் பெண்களே அதிகமாக இருந்து வருகின்றனர். இவர்களினால் தான் தோட்டங்களில் தொழிற்சங்கங்கள் செயற்படுவதுடன், தமிழ் அரசியல் பிரதிநிதித்துவங்களும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், பெண்களுக்கான பிரதிநிதித்துவங்கள் விகிதாசாரங்களுக்கமைய இடம்பெறுவதில்லை.

தொடர்ந்தும் இந்நிலை நீடிக்கக் கூடாது. மலையகப் பெருந்தோட்டப் பெண்களை பிரதிநிதித்துவம் செய்யவென, பெருந்தோட்டப் பெண்கள் முன்வர வேண்டும். தேர்தல்களில் 25 சதவீத ஒதுக்கீடுகளில் பெருந்தோட்டப் பெண்கள் உள்வாங்கப்பட வேண்டியது அவசியமாகும். நடைபெறும் தேர்தல்களில் அப்பெண்கள் வெற்றிபெற வேண்டியதுடன், தேசியப் பட்டியல் முறையிலும், அவர்கள் தெரிவு செய்யப்படல் வேண்டும்.

தேர்தல் பட்டியல் தயாரிக்கப்படும் போது, பெருந்தோட்டத் துறைசார் பெண்கள் உள்வாங்கப்படும் விடயத்தில், மிகுந்த கவனத்தைச் செலுத்த வேண்டும். இது விடயத்தில், நாம் மெத்தனப் போக்கில் அசட்டையாக இருப்போமேயானால், பெருந்தோட்டத்துறைசார் பெண்கள் ஒதுக்கப்பட்டு பெரும்பான்மை சமூகப் பெண்கள் உள்வாங்கப்பட்டுவிடுவர்.

ஆகவே, நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட்டு, பெருந்தோட்டத்துறை சார் பெண்களை பட்டியலில் இணைப்பதுடன் அவர்களை வெற்றி பெறச் செய்யவும் வேண்டும். அத்துடன் அவர்கள் தேசிய பட்டியலிலும் தெரிவாக வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment