கடும் எதிர்ப்புகளை சமாளித்து மதுசூதனனை வேட்பாளராக்கிய ஓபிஎஸ்

1873 0

அதிமுகவில் எழுந்த கடும் எதிர்ப்புகளை சமாளித்து தனது ஆதரவாளரான மதுசூதனனை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளராக்கியுள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

தேர்தல் அறிவிப்பு வெளியான 2-வது நாளே திமுக வேட்பாளராக என்.மருதுகணேஷ் மீண் டும் போட்டியிடுவார் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து விட்டார்.

ஆனால், ஆளும் கட்சியான அதிமுக, நீண்ட இழுபறிக்குப் பிறகே வேட்பாளரை அறிவித்துள்ளது. வேட்பாளரை தேர்வு செய்ய கடந்த 27-ம் தேதி அதிமுக ஆட்சி மன்ற குழுக் கூட்டம் நடந்தது. கூட்டம் தொடங்கியதுமே கடந்த ஏப்ரலில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது போட்டியிட்ட அவைத் தலைவர் இ.மதுசூதனனை நிறுத்த வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். அதற்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளிட்ட முதல்வர் பழனி சாமி ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் சி.வி.சண்முகம், மைத்ரேயன் எம்.பி. இருவருக்கும் காரசார விவாதம் நடந்துள்ளது. .

இதனால் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதைத் தொடர்ந்து ஆர்.கே.நகரில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. மதுசூதனன், முன்னாள் எம்.பி.யும், வட சென்னை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான பாலகங்கா, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, அனைத்துல எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் உள்பட 27 பேர் விருப்ப மனு அளித்தனர். அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பாலகங்காவை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. பாலகங்காவுக்கு ஆதரவாக சென்னை மாநகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதனால் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சூழலில் நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்த அதிமுக ஆட்சிமன்ற குழுக் கூட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதற்கு தஞ்சாவூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா காரணமாகக் கூறப்பட்டாலும் வேட்பாளர் முடிவு செய்யப்படாததால் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

மதுசூதனனை வேட்பாளராக்குவதில் உறுதியாக இருந்த துணை முதல்வர் ஓபிஎஸ், முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசியுள்ளார். ‘‘மதுசூதனன் சாதாரண நிர்வாகி அல்ல. ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட அவைத் தலைவர். அவர் தலைமையிலான அதிமுகவுக்குதான் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை வழங்கியுள்ளது. ஆர்.கே.நகரில் ஏற்கெனவே 3 முறை போட்டியிட்டவர். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றவர். எனவே, அவரை வேட்பாளராக்க வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார். அதன்பிறகே மதுசூதனனை வேட்பாளராக்க முதல்வர் பழனிசாமியும், அமைச்சர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து ஆட்சி மன்ற குழுக் கூட்டத்தில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக மதுசூதனன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடும் எதிர்ப்புகளை சமாளித்து தனது ஆதரவாளரை வேட்பாளராக்கியுள்ள ஓபிஎஸ், களத்தில் பெரும் சவாலை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதே தற்போதைய நிலவரம்.

Leave a comment