தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

18559 0

குமரி கடல் பகுதியில் உருவாகியுள்ள ‘ஒக்கி’ புயலால் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்யும். தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 29-ம் தேதி நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 30-ம் தேதி (நேற்று) அதிகாலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது புயலாக மேலும் வலுவடைந்து, காலை 8.30 மணி அளவில் கன்னியாகுமரியில் இருந்து சுமார் 70 கி.மீ. தூரத்தில் குமரி கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது. இந்தப் புயலுக்கு ‘ஒக்கி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்பெயர் வங்கதேசம் வழங்கியுள்ளதாகும்.

‘ஒக்கி’ புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, லட்சத்தீவு நோக்கி நகரக்கூடும். அதன் காரணமாக, அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது இடைவெளிவிட்டு சிலமுறை மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் மணிக்கு 65 முதல் 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். கடல் சீற்றத்துடன் காணப்படும். அதனால், இந்த மாவட்டங்களின் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

30-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக புதுச்சேரி, தஞ்சை மாவட்டம் வல்லம், குமரி மாவட்டம் தக்கலையில் 7 செ.மீ. மழை பதிவானது. கன்னியாகுமரி, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், சென்னை விமான நிலையம், நுங்கம்பாக்கத்தில் 6 செ.மீ. மழையும், தஞ்சாவூர், குமரி மாவட்டம் மயிலாடி, நெல்லை மாவட்டம் ராதாபுரம், நாகை மாவட்டம் மயிலாடுதுறை, சென்னை தரமணியில் தலா 5 செ.மீ. மழையும் பதிவானது.

இவ்வாறு அவர் கூறினார்.

3-ம் எண் எச்சரிக்கை கூண்டு

‘ஒக்கி’ புயல் உருவானதைத் தொடர்ந்து, தென் மாவட்டங்களில் உள்ள பாம்பன், தூத்துக்குடி, ராமேசுவரம், குளச்சல் ஆகிய துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, எண்ணூர், கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம் துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Leave a comment