60 கிலோமீற்றர் வேகத்திற்கு உட்பட்டு வாகனங்களை செலுத்துமாறு கோரிக்கை

267 0

தெற்கு அதிவேக வீதியில் வாகன சாரதிகள் 60 கிலோமீற்றர் வேகத்திற்கு உட்பட்டு வாகனங்களை செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது. 

கன மழை மற்றும் கடும் காற்று காரணமாக அவதானமாக செயற்படுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, காலி. மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, பதுளை, மாவட்டங்களில் கடும் காற்று வீசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் மரங்கள் முறிந்துள்ளதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளளதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இந்தநிலையில், தெற்கு, சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமாக மழைவீழ்ச்சி பதிவாகும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

கரையோரப் பிரதேசங்களில் காற்று சுமார் 60 தொடக்கம் 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாக் கடலில் அதிகரித்துள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் சீரற்ற வானிலை நிலவக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும், மாத்தளை மற்றும் கண்டி மாவட்டத்திற்கு மண் சரிவு மற்றும் கற்கள் புரண்டு விழுவது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மண் சரிவு ஆபத்துக்கள் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படும் பிரதேசங்களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a comment