பேச்சுத் தோல்வி போராட்டம் தொடரும்!!

198 0
“இலங்கை போக்குவரத்துச் சபையின் உயர் அதிகரிக்கும் வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்கத்துக்கும் இடையே வவுனியாவில் இன்று நண்பகல் இடம்பெற்ற பேச்சுக்களின் போது சாதகமான முடிவுகள் எட்டப்படவில்லை. அதனால் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்புப் போராட்டம் தொடரும்”
இவ்வாறு வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.
வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் பிரதான முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரை வடக்கிலிருந்து உடனடியாக இடமாற்றக்கோரி வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஊழியர்கள் நேற்று செவ்வாய்கிழமை தொடக்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரச பேருந்து சேவைகள் வடக்கு முழுவதும் இன்று இரண்டாவது நாளாக முடங்கி உள்ளன. இதனால் மாணவர்களும் பொதுமக்களும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் வடபிராந்திய போக்குவரத்துச் சபை தொழிற்சங்கத்துடன் பேச்சு நடத்த இலங்கைப் போக்குவரத்துச் சபையின் உயர் அதிகாரி உள்ளிட்ட குழு இன்று வவுனியாவுக்கு வந்தது. இரு தரப்புக்கும் இன்று நண்பகல் பேச்சுக்கள் இடம்பெற்றன. எனினும் தொழிற்சங்கத்தின் கோரிக்கைக்கு சாதகமான பதிலை கொழும்பு அதிகாரி வழங்கவில்லை.
இதனால் தமது போராட்டம் தொடருமென தொழிற்சங்கம் தெரிவித்தது.
இதேவேளை, யாழ்ப்பாணத்திலிருந்து பேருந்துகளில் கறுப்புக் கொடி கட்டி தொடரணியாக வவுனியாவுக்குச் சென்ற தொழிற்சங்கத்தினர் பேச்சுக்கள் தோல்வியடைந்த நிலையில் யாழ்ப்பாணம் திரும்புகின்றனர்.

Leave a comment