மாணவர்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்கு Unique Student Code, Finger Print முறை

194 0

அரசாங்க பாடசாலைகளுக்கு உள்வாங்கப்படும் அனைத்து மாணவர்களினதும் அடையாளத்தை உரிய முறையில் உறுதி செய்யவும் பரீட்சை நடவடிக்கைகளின் போது மாணவர்களின் விபரங்களை அதிகாரிகள் இலகுவாக அறிந்து கொள்வதற்குமான திட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

பரீட்சை திணைக்களத்தின் நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஆலோசனைகளை முன்வைப்பதற்காகக் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மூலம் நியமிக்கப்பட்டிருந்த குழுவினால் இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலைக்கு உள்வாங்கப்படும் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் அடையாளத்தை உறுதி செய்யும் இலக்கமொன்றை (Unique Student Code) அறிமுகம் படுத்தவும் அதனுடன் கைவிரல் (Finger Print) அடையாளத்தின் மூலம் ஆள் அடையாளத்தை உறுதி செய்து அதனுடாக கியூ ஆர் (QR) குறியீடு ஒன்றை தயாரிப்பதற்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இலக்கம் பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளப்படும் பரீட்சைகளிலும் பயன்படுத்துவதற்கு ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி முக்கிய வெட்டுப்புள்ளி பரீட்சைகளான தரம் 5 புலமைபரிசில் பரீட்சை, கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை, கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஆகிய பரீட்சைகளின் போது மாணவர்களின் செயல்திறன், ஆற்றல்களைக் கண்காணிக்கவும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை பரீட்சை மோசடியை தடுக்கவும் குறித்த இலக்கம் பெரும் பயனுள்ளதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வினாத்தாள் திருத்தப்பணிகளினை மேலும் இலகுவாக்கும் நோக்கில் புதிய தொழிநுட்பத்துடனான ஓசிஆர் OCR இயந்திரத்தை (Optical Character Readers) கொள்வனவு செய்யவும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் செயல்த்திறன் விடைப்பத்திரத்தை மதிப்பீடு செய்வதற்கான காலம் குறைவடைவதுடன் விரைவாக பெறுபேறுகளை வெளியிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment