புகையிரதத் திணைக்களத்தில் பெண்களுக்கு இடமில்லை!

303 0

புகையிரதத் திணைக்களத்தில் பணியாற்றும் பெண்களை வேறு திணைக்களங்களுக்கு மாற்றுவதற்கு அமைச்சரவையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரவு-செலவுத் திட்ட விவாதம் பாராளுமன்றத்தில் நேற்று (25) நடைபெற்றபோதே இக்கோரிக்கை விடுக்கப்பட்டது.

வரவு-செலவுத் திட்டத்தைச் சார்ந்து, திணைக்களங்களின் செலவீனங்கள் குறித்த விவாதம் நேற்று பாராளுமன்றில் நடைபெற்றது. வெளிவிவகார, மூலோபாய அபிவிருத்தி, போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்கள் இதில் பிரதான அங்கம் வகித்தனர்.

இதன்போது, பல்வேறு சந்தர்ப்பங்களில் புகையிரதத் திணைக்களத்தில் தற்காலிகமாக இணைத்துக்கொள்ளப்பட்ட சுமார் இரண்டாயிரம் ஊழியர்கள் நிரந்தரமாக்கப்படுவார்களா என்று பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி கேள்வி எழுப்பினார். அதில் 468 பெண்கள் தினக்கூலிகளாகப் பணியாற்றுவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதற்கு பதிலளித்த போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, புகையிரதத் திணைக்களத்தில் பெண்களுக்கு கடுமையான பணிகள் வழங்க முடியாதுள்ளதாகக் கூறினார்.

அப்படியானால் அவர்கள் எதற்காக இணைத்துக்கொள்ளப்பட்டார்கள் என்றும் அவர்களது எதிர்காலம் என்னவாகும் என்றும் ஹந்துன்னெத்தி பதில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, புகையிரதத் திணைக்களத்தில் பணியாற்றும் பெண்களை வேறு திணைக்களங்களுக்கு மாற்றவும் இதனால் உருவாகும் வெற்றிடங்களுக்கு வேறு திணைக்களங்களில் பணியாற்றும் ஆண்களை இணைத்துக்கொள்ளவும் அமைச்சரவை அனுமதியளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Leave a comment