பேக் தொலைந்த விவகாரம்: பெண் குடும்பத்துக்கு விமான நிறுவனம் ரூ.1 லட்சம் நஷ்டஈடு

3898 0

பேக் தொலைந்த விவகாரம் தொடர்பாக பெண் குடும்பத்துக்கு விமான நிறுவனம் ரூ.1 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மணலியை சேர்ந்தவர் தீனதயாளன். இவரது மனைவி அம்ச வேணி. தற்போது இவர் உயிருடன் இல்லை. மரணம் அடைந்து விட்டார்.

கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் 7-ந்தேதி அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட் மெட்ரோவில் இருந்து சென்னைக்கு ‘ஏர்பிரான்ஸ்’ நிறுவன விமானத்தில் பயணம் செய்தார்.

அப்போது அவர் தன்னுடன் 2 ‘பேக்‘குகளை எடுத்து சென்றார். அந்த விமானம் மறுநாள் சென்னைக்கு வந்தது. அப்போது அம்ச வேணியின் ஒரு ‘பேக்‘ தொலைந்து விட்டது.

அதில் ரூ.77 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் இருந்தன. எனவே, அந்த பேக்கை திரும்ப கிடைக்க செய்யும்படி ஏர்பிரான்ஸ் விமான நிலையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் அந்த நிறுவனம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையமும் கண்டு கொள்ள வில்லை. எனவே சென்னை தெற்கு நுகர்வோர் கோர்ட்டில் தீனதயாளன் வழக்கு தொடர்ந்தார். அதில் விமான நிறுவன ஊழியர்களின் சேவையில் ஏற்பட்ட கவனக்குறைவு காரணமாக ‘பேக்‘ தொலைந்து விட்டது. அதில் ரூ.77 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் இருந்தன.

எனவே தனது குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என தெரிவித்து இருந்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு ஏர்பிரான்ஸ் விமான நிறுவனமும், சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையமும் மரணம் அடைந்த பெண் பயணி அம்சவேணி குடும்பத்துக்கு ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

அதில் ரூ.77 ஆயிரம் தொலைந்த ‘பேக்‘கில் இருந்த பொருட்களுக்காகவும், ரூ.30 ஆயிரம் பயணி குடும்பத்துக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காகவும் விதிக்கப்பட்டது.

Leave a comment