தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்

2320 0

இந்திய கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து ராமேசுவரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தொல்.திருமாவளவன் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கிருஷ்ணகிரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க கூடிய சக்திகளை அடையாளம் கண்டு, அவர்களின் சதியை முறியடிக்க ஜனநாயக சக்திகள் ஒன்று சேர இந்திராகாந்தியின் பிறந்த நாளில் வேண்டுகோள் வைக்கிறேன். மதசார்பற்ற சக்திகள், இடதுசாரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து மதவாதத்திற்கு எதிராக போராட வேண்டும்.

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி தனது மகளின் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் தமிழக அரசோ பரோலில் வந்தால் நளினி தப்பித்து சென்று விடுவார் என அபிடவிட் தாக்கல் செய்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

26 ஆண்டுகளாக நளினி சிறையில் உள்ளார். அவர் மீது எந்த கரும்புள்ளியும் கிடையாது. ஆகவே தமிழக அரசு தனது நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நளினிக்கு பரோல் வழங்க அனுமதிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான தாமஸ் சோனியாகாந்திக்கு எழுதி உள்ள கடிதம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த வழக்கில் 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக மீனவர்கள் மீது சிங்கள மீனவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்த நிலையில் தற்போது இந்திய கடற்படையே தாக்குதல் நடத்தி உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. ராமேசுவரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய கடற்படை அவர்களை நடத்திய விதம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ராமேசுவரம் மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து ராமேசுவரத்தில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதற்கான தேதி பிறகு அறிவிக்கப்படும்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் வருமான வரி சோதனை நடந்துள்ளது. வருமான வரித்துறையினருக்கு எந்த இடத்திலும் சோதனை நடத்தலாம் என்ற அதிகாரம் உள்ளது. பொதுவாக வருமான வரி சோதனை என்றால் 100-க்கு 100 ஆளுங்கட்சிக்கு வேண்டாதவர்களுக்கு எதிராக நடத்தப்படுகிறது.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி விரும்புவதை தமிழக கவர்னர் செய்கிறார் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் அதிகார வரம்பு மீறல் எந்த அளவில் உள்ளது என்பதை காட்டுகிறது. தமிழகத்தில் திராவிட கட்சிகளை அழிப்பதன் மூலம் பா.ஜனதா காலூன்ற முடியும் என நினைக்கிறார்கள். தமிழகத்தில் 2 திராவிட கட்சிகளையும் பலவீனப்படுத்த அவர்கள் திட்டமிடுகிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment