உங்கள் விரல்களை வைத்தே உங்கள் கண்களை குத்துகிறார்கள்!

243 0

மலையக மக்கள் யாரை நம்பி வாக்களித்தீர்களோ அவர்கள் உங்கள் விரல்களை வைத்தே உங்கள் கண்களை குத்துகிறார்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்..

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான மக்கள் சந்திப்பு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கிறெட்வெஸ்டன், ஹொலிரூட் மற்றும் ரட்ணகிரிய பகுதிகளில் நடைபெற்றது. இச்சந்திப்பில் மத்திய மாகாண விவசாய, இந்து கலாச்சார மற்றும் கல்வி அமைச்சர் ராமேஸ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பிர்களான பழனி சக்திவேல், இ.தொ.கா தேசிய அமைப்பாளர் பி.ராஜதுரை, முன்னாள் பிரதேச சபை தலைவர் சதாநந்தன் இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அங்கு ஆறுமுகன் தொண்டமான் தொடர்ந்து உரையாற்றுகையில்,

அண்ணன் முத்துசிவலிங்கம் மக்களிடம் பேசும்போது அடிக்கடி சொல்லுவார் பெருந்தோட்ட மக்கள் அனைவரும் மிக கவனமாக இருங்கள். இல்லாவிட்டால் பெருந்தோட்டங்கள் வீணாகி விடும் என்று. அப்போது அவரின் பேச்சை சிலர் கேலி செய்தார்கள். இன்று அவர் கூறியது உண்மையாயிற்று. இன்று தேயிலைத் தோட்டங்கள் மூடப்பட்டு வருகின்றன. அன்று 1992 ம் ஆண்டு பெருந்தோட்டங்கள் எல்லாம் கம்பனி காரர்களிடம் கையளிக்கும்போது உதாரணமாக ஒரு தோட்டத்தில் 2000 ஏக்கர் கையளித்திருந்தால் இன்று அதன் அளவு பாதியாகவே உள்ளது. எஞ்சிய 1000 ஏக்கர் தேயிலை நிலம் காடாக காணப்படுகின்றது.

இவ்வாறு ஏன் இன்று நடக்கின்றது? 80 ஆயிரம் கிடைக்க வேண்டிய நிலுவைப் பணத்தை விடுத்து 2500 ரூபா பணத்திற்கு உங்களுக்கு ஆசைகாட்டியவர்கள் யார்? நீங்கள் யாரை நம்பி வாக்களித்தீர்களோ அவர்கள் உங்கள் விரல்களை வைத்தே உங்கள் கண்களை குத்துகிறார்கள் இன்று. அன்று மாற்றம் வேண்டும் என நீங்கள் வாக்களித்தீர்கள். அதில் நான் பிழை கூற வரவில்லை. இலங்கையில் மிகவும் செழிப்பான நிலங்கள் யாரிடம் இருக்கின்றது. அது எம்மிடமே உள்ளது.

எமது தேயிலை தோட்டங்களே செழிப்பாக காட்சியளிக்கின்றன. இதற்கு எவ்வாறு தடை விதிக்கலாம். அதனை நிறைவேற்றதான் பூச்சி மருந்தை தடை செய்தார்கள். தேயிலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் விவசாய திணைக்களங்கள் எதற்கு உள்ளது. இவ்வாறான பூச்சி மருந்துகளை மற்றும் உரம் போன்றவற்றை ஆராய்ச்சி செய்து வழங்குவதற்காகவே. இன்று அரசாங்கம் பூச்சி மருந்துகளை தடை செய்துள்ளது. இதனால் களைகளை கட்டுப்படுத்தும் பீடை நாசினிகள் பயன்படுத்தாமையினால் தேயிலை மலைகள் காடாக்கப்படுகின்றன.

மூன்று வாரங்கள் தேயிலை மலைக்கு பூச்சி நாசினிகள் தெளிக்காமல் விடுத்தால் புற்கள் வளர தொடங்கி மூன்று மாதங்களில் அத்தேயிலை மலை பெருங்காடாகி அங்கு பாம்பு, குளவி போன்ற விஷ சந்துக்கள் உருவாகிவிடும். இதனால் ஒரு குறிப்பிட்ட மாதங்களின் பின்னர் தொழிலாளர்கள் இத்தேயிலை மலைகளில் வேலை செய்வதை நிறுத்தி விடுவார்கள்.

இதனால் இத்தேயிலை மலை காடாக்கப்பட்டு நிர்வாகத்தினால் மூடப்படும். அதன் பின்னர் ஓரிரு வாரங்களில் அரசாங்கத்தினால் பெரும்பான்மை கிராமங்களாக உருவாக்கபட்டு 100 குடும்பங்களை கொண்டு வந்து குடியேற்றி விடுவார்கள். இது வெகுவிரைவில் நடைபெறப்போகின்றது. அதன் பின்னர் அவர்கள் சிறுதோட்ட முதலாளிமார்களாக மாறிவிடுவார்கள்.

இதுதான் நடக்கப்போகின்றது. இன்னும் ஐந்து வருடங்களில் இவ்வாறான நிலைமை ஏற்பட போகின்றது. இதற்கு மக்களாகிய நீங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடின் இருப்பதையும் இழந்து விடுவீர்கள். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடந்ததையும் நடக்கின்றதையும் நடக்கபோவதையும் சொல்லும் அதுதான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்.

எங்களின் நிறம் கருப்பாக இருந்தால் கருப்பு தான், சிவப்பாக இருந்தால் சிவப்புதான், மஞ்சளாக இருந்தால் மஞ்சள்தான். நான் இன்று உங்களிடம் வாக்குகள் கேட்க வரவில்லை உங்களின் தற்போதைய நிலைமையை பற்றி கூறதான் வந்தேன் என்றார்.

Leave a comment