காசோலையை ஆதரமாக வைத்து வழங்கிய கட்டளை சட்டரீதியற்றது

258 0
காசோலைகளை ஆதாரமாகவைத்து பணத்தை மீள வழங்குமாறு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்.
“குற்றவாளியாக இனங்காணப்பட்டவர் வழக்காளிக்கு வழங்கவேண்டிய 47 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பணத்தை செலுத்தும்படி நீதிவான் கட்டளை வழங்கியுள்ளார். அந்தக் கட்டளையானது சட்டரீதியான கட்டளை இல்லை. அந்தக் கட்டளையை இந்த மன்று தள்ளுபடி செய்கிறது.
 மாறாக எதிரிக்கு 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. இந்தத் தண்டனை நீதிவான் நீதிமன்றத் தீர்ப்புத் திகதியிலிருந்து நடைமுறைக்குவருகிறது” என மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.
யாழ்ப்பாணம், சுதுமலையில் சினிமா படமாளிகைக்கு உபகரணங்கள் வழங்குவதாகப் பணத்தைப் பெற்று ஏமாற்றினார் என மக்கள் வங்கியின் முன்னாள் ஊழியர் ஒருவருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் சிறப்புக் குற்றத் தடுப்புப் பொலிஸார் இந்த வழக்கைத் தாக்கல் செய்தனர்.
எதிரிக்கு எதிராக அவரால் வரையப்பட்ட 5 காசோலைகள் நீதிவான் மன்றில் முன்வைக்கப்பட்டன. 1.8.2012 திகதியிடப்பட்ட 14 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா காசோலை, 13.8.2012 திகதியிடப்பட்ட 12 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா காசோலை, 16.8.2012 திகதியிடப்பட்ட 7 இலட்சத்து 78 ஆயிரத்து 500 ரூபா காசோலை, 6.9.2012 திகதியிடப்பட்ட 7 இலட்சத்து 78 ஆயிரத்து 500 ரூபா காசோலை மற்றும் 3.9.2012 திகதியிடப்பட்ட 5 இலட்சத்து 13 ஆயிரம் ரூபா காசோலை ஆகியனவே அவை.
வழக்காளி மற்றும் மக்கள் வங்கி ஊழியர் ஒருவரும் நீதிமன்றில் எதிரிக்கு எதிராக சாட்சியமளித்தனர்.
இந்தக் கொடுக்கல் வாங்களுக்கும் வழக்காளிக்கும் எந்தத் தொடர்புமில்லை. வங்கி ஊழியரிடம் காசோலை வழங்கியே வட்டிக்குப் பணம் வாங்கியதாக எதிரி சாட்சியமளித்தார்.
விசாரணைகளின் நிறைவில் கடந்த ஜனவரி 4ஆம் திகதி எதிரியை குற்றவாளி என யாழ்ப்பாணம் நீதிவான் மன்று அறிவித்தது.
குற்றவாளி 3 குற்றங்களுக்ககாகவும் தலா ஆயிரத்து 500 ரூபா தண்டம் செலுத்தவேண்டும். வழக்காளிக்கு 47 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பணத்தை இழப்பீடாகச் செலுத்தவேண்டும். அதனை வழங்கத்தவறின் 2 ஆண்டுகள் சிறைத் தண்டணையை அனுபவிக்கவேண்டும்” என்று கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தண்டணைத் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்டத்தரணி மு.றெமிடியஸ் ஊடாக எதிரி மேன்முறையீடு செய்தார்.
இது தொடர்பில் மேன்முறையீட்டு மனுதார்ரின் சட்டத்தரணி மேல் நீதிமன்றில் சமர்ப்பணம் செய்திருந்தார். அதனை ஆராய்ந்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி, நேற்று தீர்பளித்தார்.
” இந்த வழக்கின் எதிரி மக்கள் வங்கியின் ஊழியர். இவருக்கு பணம் வழங்கியவரும் மக்கள் வங்கி ஊழியர். மக்கள் வங்கி அரச வங்கியாகும். அதில் பணியாற்றிய இருவரும் எவ்வாறு கோடிக்கணக்கில் பணம் புரட்ட முடியும்? அவர்களுக்கு எவ்வாறு இவ்வளவு பணம் வந்தது? போன்றவை தொடர்பில் இவர்கள் பணியாற்றிய வங்கிக் கிளை முகாமையாளரும் பிராந்திய முகாமையாளரும் விசாரணை நடத்தவேண்டும்.
மீற்றர் வட்டி சட்டவிரோதமானது. இங்கு போடப்பட்ட வழக்கும் மீற்றர் வட்டி கொடுக்கல் வாங்கல் என்பது சாட்சிகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சட்டவிரோதமான நடவடிக்கைக்கு நீதிமன்றில் நீதியைப் பெறமுடியாது.
எதிரிக்கான தண்டணையை மாற்றியமைத்து புதிய தண்டணைக்  நீதிவான் கட்டளையை சிறைச்சாலைக்கு வழங்கவேண்டும்.
இந்தக் கட்டளையை நீதிவான் நீதிமன்றுக்கு அனுப்பிவைக்க மேல் நீதிமன்றப் பதிவாளருக்கு கட்டளையிடப்படுகிறது” என்று தீர்ப்பில் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment