முஸ்லிம் சமூ­கத்தின் முதுகில் நிரந்­தர அடி­மைச்­சா­சனம் எழு­தப்­படும் அபாயம்-ரிஷாத் பதி­யுதீன்

272 0

புதிய அர­சியல் யாப்பின் மூலம் முஸ்லிம் சமூ­கத்தின் முதுகின் மீது நிரந்­த­ர­மான அடிமைச் சாச­ன­மொன்று எழு­தப்­படும் அபாயம் இருப்­ப­தாக அஞ்­சு­கிறோம் என்று அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

பெண் எழுத்­தாளர் எஸ்.யு. கமர்ஜான் பீ.பி. எழு­திய “நான் மூச்­ச­யர்ந்த போது” எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா வத்­தளை ஹூணுப்­பிட்டி சாஹிரா மகா வித்­தி­யா­ல­யத்தில் நேற்றுமுன்தினம் நடை­பெற்றது. அந் நிகழ்வில் பிர­தம விருந்­தி­ன­ராக கலந்துகொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு எச்­ச­ரிக்கை விடுத்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

தேர்தல் முறை மாற்றம், புதிய யாப்பு உரு­வாக்கம், நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை ஒழிப்பு ஆகிய மூன்று விட­யங்­களும் முஸ்லிம் சமூ­கத்தைப் பொறுத்­த­ளவில் பாதிப்­பான, ஆபத்­தான நிலை­யையே ஏற்­ப­டுத்தும் என நாம் கரு­து­கிறோம். நிறை­வேற்று ஜனா­தி­பதி முறையை மாற்றி சிறு­பான்மை சமூ­கத்தின் வாக்­கு­களை செல்­லாக்­கா­சாக மாற்­று­வ­தற்­கான முயற்சி மிக வேக­மாக நடந்­தேறி வரு­கின்­றது. அத்­துடன் கடந்த காலங்­களில் பாரா­ளு­மன்ற முறை­களில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட மாற்­றங்கள் போல, மீண்டும் இந்த முறையில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வதற்­காக தேர்தல் முறையை மறு­சீ­ர­மைக்க வேண்­டு­மென அரசு வரிந்து கட்டிக்கொண்டு நிற்­கின்­றது.

முஸ்லிம் சமூ­கத்­தி­னது பாரிய பங்­க­ளிப்­பி­னாலும் பல்­வேறு அர்ப்­ப­ணிப்­புக்­க­ளி­னாலும்  நாம் விரும்பி உரு­வாக்­கிய நாட்டுத் தலை­மைகள் இவ்­வா­றான புதிய முயற்­சி­களை முன்­னெ­டுத்துச் செல்­வ­தனால், அதன் மூலம் நமக்கு வரப்­போகும் ஆபத்­துக்கள் குறித்து நாம் கண்­தி­றந்து பார்க்­காமல் கண்­மூ­டித்­த­ன­மா­கவே இருக்­கின்றோம்.

சிறிய பிரச்­சி­னை­க­ளுக்­காக ஊருக்கு ஊர், பிர­தே­சத்­துக்குப் பிர­தேசம் என ஏட்­டிக்குப் போட்­டி­யாக அடி­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றோ­மே­யொ­ழிய நமக்கு முன்னே வந்து நிற்கும் ஆபத்­துக்கள் தொடர்பில் எந்­த­வி­த­மான அக்­க­றையும் காட்­டாமல் இருப்­பதுதான் வேத­னை­யா­னது. அறி­வுள்ள, ஆற்­ற­லுள்ள, பண­ப­ல­முள்ள சமூ­க­மாக முஸ்லிம் சமூகம் பார்க்­கப்­ப­டு­கின்ற போதும் இவ்­வா­றான விட­யங்­களில் அலட்டிக் கொள்­ளாமல் இருப்­பது துர­திர்ஷ்­ட­மா­னதே. சிறிய கட்­சியின் தலைவன் என்ற வகை­யிலும் சிறு­பான்மை சமூ­கத்தைச் சார்ந்த கட்­சி­யொன்றின் பொறுப்­பாளன் என்ற வகை­யிலும் நாம் மிகவும் நொந்து போய் இருந்­தாலும் இந்த ஆபத்­துக்­களை எவ்­வாறு முறி­ய­டித்து, சமூகம் சார் வெற்­றி­களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற அதீத முயற்­சி­க­ளிலும் ஈடு­பட்டு வரு­கின்றோம்.

ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக சிங்­கள இளை­ஞர்­களும் தமிழ் இளை­ஞர்­களும் ஆயு­த­மேந்­திய போதும் முஸ்­லிம்கள் அமை­தி­யா­கவே வாழ்ந்­தனர். ஜன­நா­யக வழி­யையே தேர்ந்­தெ­டுத்­தனர். நமது அர­சியல் முன்­னோ­டிகள் கற்­றுத்­தந்த வழி­மு­றை­களை பின்­பற்­றியே ஆட்­சி­யா­ளர்­க­ளுடன் எப்­போதும் ஒத்­து­ழைத்து வந்­தனர், வரு­கின்­றனர். இந்த யதார்த்­தத்­தை அனை­வரும் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்ச் சகோ­த­ரர்கள் மூன்று தசாப்­தங்­க­ளுக்கு மேலாக அர­சியல் தீர்வு ஒன்றை தேடி நிற்கும் பின்­ன­ணி­யிலும், அந்த கோரிக்­கையை எவ்­வாறு நிறை­வேற்­று­வ­தென்ற ஆழ­மான சிந்­த­னையில் அர­சாங்கம் முயற்­சி­களை மேற்­கொண்டு வரும் சூழ்­நி­லை­யிலும் முஸ்­லிம்­களின் சவால்­களை வென்­றெ­டுக்க வேண்­டிய நிலை நமக்கு நேரிட்­டுள்­ளது.

கல்வி, பொரு­ளா­தார, வாழ்­வா­தார மற்றும் மீள்­கு­டி­யேற்ற பிரச்­சி­னை­களைத் தீர்க்கும் நோக்கில் எமது கட்சி பல கட்­ட­மைப்­புக்­களை வைத்துக்கொண்டு நேர்­மை­யுடன் முன்­னெ­டுத்துச் செல்­கின்­றது. எனினும் இந்த பய­ணத்தை தடுப்­ப­தற்­காக பல முனை­க­ளிலும் அம்­புகள் எய்­தப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன. சமு­தாயம் சார்ந்­த­வர்­களின் அம்­பு­களும் சிங்­களப் பேரி­ன­வா­தி­களின் அம்­பு­களும், தமிழ்ப் பேரி­ன­வா­தி­களின் அம்­பு­களும் வெவ்வேறு வடி­வங்­களில் பல்­வேறு கோணங்­களில் இருந்தும் நமக்கு எறி­யப்­பட்ட போதும் இறை­வனின் உத­வி­யினால் அவற்­றை­யெல்லாம் முறி­ய­டித்துக்கொண்டு முன்­னேறும் சக்­தியை இறைவன் தந்­துள்ளான்.

சமூ­கத்­துக்கு நேர்ந்­துள்ள ஆபத்­துக்­களை வெளியில் பேசினால் ஆட்­சியை தொலைக்­கப்­பார்க்­கிறார், முன்­னைய ஆட்­சி­யா­ளர்­க­ளுடன் ஒப்­பந்தம் மேற்­கொண்டு விட்டார், நல்­லாட்­சியை வீட்­டுக்கு அனுப்ப துடிக்­கின்றார் என்­றெல்லாம் கதை­ய­ளந்து எமது குரல்­வளையை நசுக்­கு­வ­தற்கு எத்­த­னிக்­கின்­றனர் என்றார்.

Leave a comment