அரச சேவையை மீண்டும் கட்டியெழுப்ப அரசு அர்ப்பணிப்புடன் செயற்படும் –மைத்ரிபால சிறிசேன

409 0

வீழ்ச்சியடைந்துள்ள அரச சேவையை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றதென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

பல தசாப்தங்களுக்கு முன்னர் வினைத்திறனான, பலமான அரசசேவை நாட்டில் காணப்பட்டதுடன், பிற்காலப்பகுதியில் ஏற்பட்ட அரசியல் தலையீடுகளின் காரணமாக அரச சேவை தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று (13) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற அரச கணக்குகள் பற்றிய பாராளுமன்றக் குழுவின் மதிப்பீட்டு செயற்திட்டத்தின் பெறுபேறுகளுக்கமைய நடைபெற்ற தேசிய விருது விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2015 ஆம் நிதி ஆண்டில் பாராளுமன்றத்தின் கணினி வலையமைப்புத் தரவுத் தொகுதியின் ஊடாக நாடு பூராகவும் பரந்து காணப்படும் 842 அரச நிறுவனங்களிலிருந்தும் பெறப்பட்ட தரவுகள் மதிப்பீடு செய்யப்பட்டு, வெவ்வேறு பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட, உரிய நிதியாண்டில் உயர் வினைத்திறனுடன் செயற்பட்ட 81 நிறுவனங்களுக்கு இதன்போது விருதுகள் வழங்கப்பட்டன.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சுயாதீனமாக, பக்கச்சார்பற்று செயற்பட அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டதுடன், இந்த விருது வழங்கலின் ஊடாக அது மேலும் உறுதிசெய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இதனை ஏற்பாடு செய்த சகலருக்கும் தனது நன்றியையும் தெரிவித்தார்.

மேலும் தற்போதைய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை கையேற்றதன் பின்னர் ஊழல், மோசடி, முறைகேடுகளில் ஈடுபடுவதற்கு நாட்டில் ஒருவிதமான அச்சம் நிலவுவதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

அரச சேவையில் காணப்படும் பலவீனங்களைத் தவிர்த்து வலுவான அரச சேவையை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இத்தகைய விருது விழாக்கள் அரச சேவையை பலப்படுத்துவதில் பாரிய பங்களிப்பினை வழங்குகின்றன என்றும் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டின் நிதிக்கட்டுப்பாடு பற்றிய சட்ட திட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் இணங்க சிறந்த சேவையை வழங்கிய நிறுவனத்திற்கு ஜனாதிபதியினால் இதன்போது தங்க விருது வழங்கப்பட்டது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, அரச கணக்குகள் பற்றிய பாராளுமன்றக் குழுவின் தலைவர் லசந்த அழகியவண்ண, கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க, பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் தம்மிக்க தஸநாயக்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

Leave a comment