ஸ்ரீ ல.சு.க.- கூட்டு எதிர்க் கட்சி இணைவு தொடர்பில் திருப்பம் ! 2 வாரத்தில் தீர்மானம்

374 0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் மிக்க செயற்குழுக் கூட்டமொன்று அடுத்துவரும் இரு வாரங்களில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 03 ஆம் திகதி நடைபெற்ற கட்சியின் ஸ்ரீ ல.சு.க.யின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்துக்கு, கூட்டு எதிர்க் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், கூட்டு எதிர்க் கட்சியின் எவரும் அக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. கூட்டு எதிர்க் கட்சி நிபந்தனையிட்டு சுதந்திரக் கட்சித் தலைவர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாம் கட்சியில் கலந்துகொள்வதாயின் சில வரையறைகளை கட்சி அறிவிக்க வேண்டும் என அக்கடிதத்தில் கூட்டு எதிர்க் கட்சி கோரியுள்ளதாகவும், இந்த வரையறைகளில் இணைந்து செயற்படுவதற்கு முடியுமான விட்டுக் கொடுப்புக்கள் குறித்து இறுதித் தீர்மானம் எடுப்பதற்கே இக்கூட்டம் இன்னும் இருவாரங்களில் இடம்பெறவுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன.

கூட்டு எதிர்க் கட்சியை அரவணைத்துக் கொண்டு அனைவரையும் ஒன்றிணைத்துச் செயற்பட மிகவும் தகுதியானவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆவார் எனவும், அவரை விட்டால் வேறு யாராளும் இந்த நாட்டைக் காப்பாற்ற முடியாது எனவும், இதனை தான் மிகவும் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் இலங்கை பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் கடந்த வாரம் முக்கிய கூட்டமொன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, கூட்டு எதிர்க் கட்சியுடன் இணைய வேண்டும் என மகா சங்கத்தினர் பெரும் பிரயத்தனம் எடுத்து வருவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளன.

Leave a comment