தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், சமகால அரசியல் தொடர்பான விசேட கலந்துரையாடல் (காணொளி)

397 0

மன்னார் மறை மாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் ஏற்பாட்டில், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், சமகால அரசியல் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று மாலை நடைபெற்றது.

இக் கலந்துரையாடல் மன்னார் ஆயர் இல்லத்தில், மன்னார் மறை மாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது.

கலந்துரையாடலில் மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்மலநாதன், வட மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் சிறிகாந்தா, வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், வட மாகாண சபை உறுப்பினர்களான வைத்தியகலாநிதி சத்தியலிங்கம், சட்டத்தரணி எஸ்.பிரமூஸ் சிறாய்வா, சட்டத்தரணி பா.டெனிஸ்வரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஆர்.குமரேஸ் உட்பட, மன்னார் மறை மாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அருட்தந்தையர்கள் கலந்துகொண்டனர்.

இதன் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் வைத்துள்ள அபிப்பிராயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய பல்வேறு விடங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதோடு, தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் உள்ள கருத்து முரண்பாடுகள் குறித்து ஆராயப்பட்டது.

அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையோடும், புரிந்துணர்வோடும் செயற்பட வேண்டும் போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மட்டும் கலந்துகொண்டிருந்தார்.

ஏனைய கட்சிகள் சார்பில் நிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment