தொடர் கன மழையினால் வான் பாயும் வழுக்கியாறு! மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை

318 0

யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக தொண்டமானாறு கடல் நீரேரியின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த பகுதியினை சூழவுள்ள மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணித்தியாலங்களாக தொடர் மழை பெய்து வருகின்றது. இந்நிலை நீடிக்குமாக இருந்தால் தொண்டமானாறு கடல் நீரேரியின் நீர் மட்டம் மேலும் அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, கோப்பாய், அச்சுவேலி, புத்தூர், வாதரவத்தை, மற்றும் மண்டான் ஆகிய பகுதி மக்களை மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளர் என். சுதாகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, யாழ். காரைநகர் வீதியில் கல்லுண்டாய் சந்தியிலிருந்து அராலி வடக்கு வரையான பகுதியில் வீதிக்கு மேலால் வெள்ளம் பாயும்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழுக்கை ஆறு வாய்க்காலின் நீர் மட்டம் அதிகரித்ததாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், வழுக்கை ஆறு வாய்க்காலின் 10 வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Leave a comment