இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 2018 ஆம் நிதியாண்டிற்கான பாதீடு

218 0

முன்னாள் போராளிகள் கணவனை இழந்த பெண்கள் மற்றும் விசேட தேவையுடையோருக்கு சிறப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நிகழ்த்திய 2018 ஆம் ஆண்டுக்கான பாதீடு உரையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

தேசிய அரசாங்கத்தின் மூன்றாவதும், நிதி அமைச்சர் மங்கள சமரவீரன் முதலாவது பாதீடு யோசனையாக இது முன்வைக்கப்பட்டது.

‘பசுமை மற்றும் நீல பாதீடு என்டர்பிரைஸ் – ஸ்ரீ லங்காவை ஆரம்பித்தல்’ எனும் தொனிப்பொருளின்கீழ் 2018 ஆம் ஆண்டுக்கான பாதீடு உரையை நிகழ்த்துவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீத தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கில் செங்கல் மற்றும் ஓடுகள் கொண்ட 50,000 வீடுகள் நிர்மானிக்க 750 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.

இந்த வீடமைப்பு திட்டத்துக்கு மேலதிகமாக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, மலையக வீடமைப்பு திட்டத்துக்கு 2 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், கிராமிய அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு 2 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

வடக்கிலுள்ள மாற்றுத் திறனாளி பெண்களுக்கான விசேட நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக 2 ஆயிரத்து 750 மில்லியன் ரூபாவும் நிதியாக ஒதுக்கிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் கூறினார்.

கடன் பொறியினுள் சிக்கியிருக்கும் கடனாளிகளை கடன்களிலிருந்து மீட்பதற்காக குறைந்த வட்டியிலான ஒரு கடன் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

இது வடக்கு மற்றும் வடமத்திய மாகாணத்தில் முன்னோடியாக முதலில் அறிமுகப்படுத்தப்படும் என நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களை சிறிய வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்காக வசதியளிக்கும் ‘அம்மாச்சி’ எண்ணக்கருவுக்காக 25 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, புனர்வாழ்வளிக்கப்பட்ட 12 ஆயிரத்து 600 முன்னாள் போராளிகளுக்கு நிலையான வாழ்வாதாரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், குறைந்த பட்சம் 5 முன்னாள் போராளிகளை தொழிலுக்காக சேர்த்துக் கொள்ளும் தனியார் நிறுவனங்களுக்கு தொழிலாளர் ஒருவருக்கு ஆகக் கூடியது மாதம் 10 ஆயிரம் ரூபா என்ற வகையில் 50 சதவீத சம்பள மானியம் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.

இதற்காக 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

இதேவேளை, 1990 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட அனைத்து முஸ்லிம் மக்களினதும் வதிவிட மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திக்காக 2 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படவுள்ளது

அவர்களின் மீள் குடியமர்த்தல் செயன்முறையை துரிதப்படுத்தவும், நிதி ஒதுக்கிடப்படவுள்ளது.

இதன்கீழ் மன்னார் நகரமானது புனரமைப்புச் செய்யப்படுவதோடு சிலாவத்துறை நகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமானது தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என நிதி அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, நெடுந்தீவு மற்றும் கிளிநொச்சியில் இரண்டு உணவு பதனிடும் நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளன.

இதற்காக 40 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.

மயிலிட்டி துறைமுகத்தை மீன்பிடித் துறைமுகமாக அபிவிருத்தி செய்ய 150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது அச்சுவேலி கைத்தொழில் வலயத்தில் 50 சதவீதம் மாத்திரமே பயன்படுத்தப்படுகின்றது.

இந்த வலயத்தில் தொழில்முயற்சிகளை ஆரம்பிக்கும் நிறுவனங்களின் மாதாந்த மின்சாரக் கட்டணத்தில் 50 சதவீதத்தை 2 வருடங்களுக்கு அரசாங்கம் பொறுப்பேற்கும் என நிதி அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், இந்த வலயத்தின் பொது வசதிகளும் மேம்படுத்த 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் மற்றும் கொழும்பினை இணைத்து யாழ்ப்பாணத்தில் நவீன பொருளாதார மையமொன்று உருவாக்கப்படவுள்ளது.

இதனை ஒரு பொருளாதார முக்கோணமாக வலயமாக உருவாக்க 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் கூறினார்.

தேசிய மொழிக்கொள்கை அமுலாக்கலை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கைகளுக்காக 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணியகத்தின் பணிகள், 2018 ஆம் ஆண்டில் முழுமையாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்காக ஆயிரத்து 400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க பொறிமுறையை ஒருங்கிணைப்பதற்கான செயலகத்தின் நடவடிக்கை காலமானது நீடிக்கப்படுவதோடு அதன் செயற்பாடுகளுக்காக 180 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர கூறினார்.

இதேவேளை, 2040 அளவில் எரிபொருள் அல்லாத மாற்று சக்தி ஊடாக இயங்கும் வாகனங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான விலை 10 லட்சத்தால் குறைக்கப்படவுள்ளது.

சொகுசு ரக வாகனங்களுக்கான விலை 25 லட்சத்தால் அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் முச்சக்கர வண்டிகளுக்கான இறக்குமதி விலை 50 ஆயிரத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்தார்.

சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிலாளர்களுக்கு கடன் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

கையடக்க தொலைபேசி கோபுரங்களுக்காக புதிய வரியை அறிவிட இந்த முறை பாதீட்டில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.

உந்துருளி, பயணிகள் பேருந்து சிற்றூர்ந்துகளுக்காக புதிய காபன் வரியை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நெல் உள்ளிட்ட 6 தானிய பயிர் செய்கைகளுக்காக புதிய காப்புறுதி முறைமை ஒன்றை அறிமுகப்படுத்த யோசனை முன்வைக்கப்பட்டது.

இதற்கமைய ஏக்கர் ஒன்றிற்கு 40 ஆயிரம் ரூபா பெறுமதியான காப்புறுதி பூட்கை வழங்கப்படவுள்ளது.

இதற்காக 3000 மில்லியன் ரூபா முதலீடு செய்ய எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன் தெரிவு செய்யப்பட்ட விவசாய உபரகணங்களுக்காக இதுவரை அறவிடப்பட்டு வந்த தேசத்தை கட்டியெழுப்பும் வரி இந்த பாதீட்டில் நீக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு வர்த்தகர்களை பாதுகாப்பதற்காக சில வெளிநாட்டு வியாபாரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

தெங்கு சார் சில உற்பத்தி பொருட்களுக்கான தேசத்தை கட்டியெழுப்பும் வரி நீக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, ஆயிரத்து 200 பொருட்களுக்கான மேலதிக இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளதாவும் அவர் கூறினார்.

பாடசாலை கல்விக்குள் அதிநவீன தொழில்நுட்பம், மரபணு, ரொபோ டெக், நெனோ ஆகிய பாடவிதானங்கள் உள்ளடக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

>யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக நூலகத்தை அதிநவீன தொழில் நுட்பத்துடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

விளையாட்டுதுறைசார் பாதணிகளுக்கான இறக்குமதி வரி இன்று நள்ளிரவு முதல் நீக்கப்படவுள்ளது.

குளிர்பானங்களுக்கு மேலதிகமாக சேர்க்கப்படும் 1 கிராம் சீனிக்கு 50 சதம் வரி அறிவிடப்படவுள்ளது.

மதுசாரம் லீற்றர் ஒன்றுக்கு இன்று நள்ளிரவு முதல் 15 ரூபா அறவிடப்படவுள்ளது.

மதுபானம் மீதான தேசத்தை கட்டியெழுப்பும் வரி அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் அறவிடப்படவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தமது பாதீடு உரையில் தெரிவித்தார்.

இந்த பாதீடு மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை முதல் எதிர்வரும் 16ம் திகதி வரை நாடாளுமன்றத்தில் இடம்பெறும்.

16ம் திகதி மாலை இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும்.

அத்துடன் பாதீட்டின் இறுதி வாசிப்பு மீதான வாசிப்பு 17ம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் மாதம் 9ம் திகதி வரையில் இடம்பெற்று, அன்றைய தினம் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

Leave a comment