எவருடைய அழுத்தத்திலும் வடக்கில் முகாம்களை மூடவில்லை! – இராணுவப் பேச்சாளர்

4708 13

வடக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அண்மைக் காலங்களில் – எவருடைய அழுத்தத்தின் மத்தியிலும் அகற்றப்படவில்லை என, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரட்ன தெரிவித்தார். இரணைமடு முகாமை அங்கிருந்து அகற்றுமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கூறியதாக செய்திகள் வெளியான விடயம் தொடர்பாக ஊடகவியலாளர் ​எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“இரணைமடு முகாம், நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குக் சொந்தமான கட்டடத்திலேயே இயங்கி வந்தது. அதனைக் கடந்த வருடம் (2016) நீர்ப்பாசனம் திணைக்களத்துக்கே ஒப்படைத்தோம். இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட நான்கு கட்டடங்கள் மாத்திரமே அங்கு இருக்கின்றன. அண்மைக் காலங்களில் எந்தவொரு முகாமும் அகற்றப்படவில்லை” எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரட்ன பின்வருமாறு பதிலளித்தார்.

கேள்வி ​–இராணுவ வைத்தியசாலையில் மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு காணப்படுவதாக ஒன்றிணைந்த எதிரணி குற்றம் சுமத்தியுள்ளது. இதுபற்றி என்ன கூறுகின்றீர்கள்?

பதில்- “ஒன்றிணைந்த எதிரணி முன்வைத்துள்ள குற்றச்சாட்டில் எந்த உண்மைத்தன்மையும் இல்லை. இராணுவத்தில் பணியாற்றுபவர்கள் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள், அங்கவீனமுற்றுள்ள இராணுவ வீரர்கள் ஆகியோருக்குத் தேவையான சகல மருந்து வகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இராணுவ வைத்தியசாலையில் மருந்து இல்லாத நிலையில் அதனை 48 மணித்தியாலத்துக்குள் வெளியில் இருந்து பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மருந்து வகைகளை வெளியில் இருந்து பெற்றுக்கொடுக்கும் போது, அது உரியவர்களுக்கு கிடைக்கப்பெற்றதா என்பதை உறுதிசெய்ய தொலைபேசி இலக்கம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எவரும் தமக்கு மருந்து கிடைக்கவில்லையென முறைப்பாடு செய்யவில்லை. அவ்வாறு மருந்து கிடைக்காததால் யாரும் ஆபத்துகளை எதிர்நோக்கவோ, உயிரிழப்புகள் ஏற்படவோ இல்லை” எனக் குறிப்பிட்டார்.

அத்துடன், “ஒன்றிணைந்த எதிரணியினர் கூறுவது போன்று இராணுவ வைத்தியசாலையில் மருந்து ​வகைகளுக்குத் தட்டுப்பாடு இல்லை” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment