2018 ஆம் நிதியாண்டுக்கான பாதீடின் இதுவரையிலான முன்மொழிவுகள்

377 0

2018ம் ஆண்டுக்கான பாதீடு  யோசனை இன்று நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் தனது ஆரம்ப உரையில், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

இலத்திரனியல் முச்சக்கர வண்டிகளுக்கு 90 வீத வரி விலக்கு வழங்கப்படும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

இலத்திரனியல் பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்களுக்கும் இறக்குமதி வரிகள் தளர்த்தப்படும் என்பதுடன் இலத்திரனியல் வாகனங்களுக்கான வரி ஒரு மில்லியன் ரூபா வரையில் குறைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

அதேவேளை 2040 ஆம் ஆண்டளவில் எரிபொருள் அல்லாத வாகனங்களை கொண்ட நாடாக, இலங்கையை மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் வரவு செலவு திட்ட உரையின் போது நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

அனைத்து விதமாக இலத்திரனியல் வாகனங்களுக்கும் ஒரு மில்லியன் ரூபா வரையான வரி விலக்கு அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

அதேநேரம் சொகுசு வாகனங்கள் மீதான 2.5 மில்லியன் ரூபா இறக்குமதி வரி விதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் டீசல் மூலம் இயங்கும் முச்சக்கர வண்டிகளுக்கு 50,000 ருபாவினால் வரி அதிகரிக்கப்படும் என்றும், தற்போது பாவனையில் இருக்கின்ற முச்சக்கர வண்டிகளை பங்களாதேஷிற்கு ஏற்றுமதி செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

இன்றைய வரவு செலவுத் திட்ட உரையின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

விவசாயிகளின் நலன்கருதி விஷேட காப்புறுதி திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

அதன்படி ஒரு ஏக்கர் விவசாய நிலத்திற்கு 40,000 ரூபா பெறுமதியான காப்புறுதி வழங்கப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த திட்டத்தில் 05 வகையான பயிர்களுக்கு காப்புறுதி வழங்கப்பட உள்ளதுடன், இந்த பயிர் காப்பீட்டுத்திட்டத்திற்காக, 3 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் போக்குவரத்து அமைச்சின் கீழ், முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டு நிலையம் ஒன்றை ஸ்தாபிக்க உள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர் கூறியுள்ளார்.

இதன் கீழ், அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் மீட்டர் பொருத்துவது கட்டாயமாக்கப்படுவதுடன், அது தற்போதும் நடைமுறையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

அதேநேரம் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் விஷேட பயிற்சி ஒன்று அரசாங்கத்தால் வழங்கப்படுவதுடன், அவ்வாறு பயிற்சி பெற்றவர்களுக்கு “டுக் டுக்” இலட்சனை வழங்கப்படும் என்றும் கூறினார்.

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்காக பொலித்தீன் தயாரிப்பு மீது 10 வீத வரியை அறவிட உள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறினார்.

மீள் ஏற்றுமதிக்காக இரத்தினக் கற்களை கொண்டு வருதல் மற்றும் கற்களை பட்டை தீட்டுதலின் போது விதிக்கப்பட்டிருந்த தேசத்தை கட்டியெழுப்பும் வரி ( NBT) நீக்கப்படுவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறினார்.

அதேநேரம் மோட்டார் சைக்கிள், கார் மற்றும் பயணிகள் பஸ்கள் மீது காபன் வரி அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அத்துடன் சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதற்காக அந்த துறையுடன் சம்பந்தப்பட்ட உணவு மற்றும் குளிர்பானங்கள் மீதான இறக்குமதி வரி நீக்கப்படும் என்றும் நிதியமைச்சர் கூறினார்

யாழ் பல்கலைக்கலகத்தின் வவுனியா மண்டபம் வளாகத்தில் புதிய நூல் நிலையம் ஒன்று அமைக்கப்படுவதுடன், அதற்காக 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறினார்.

அதேநேரம் ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்கும் திட்டத்திற்காக 750 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற 3500 ரூபா உதவித் தொகை 5000 ருபாவாக அதிகரிக்கப்படும்

எதிர்வரும் 2020ம் ஆண்டளவில் 20000 வீட்டுத் தொகுதிகள் உருவாக்கப்படும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். இநடத திட்டத்தின் போது 2018ம் ஆண்டாகும் போது 17.5 பில்லியன் நிதி ஒதுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

அத்துடன் வடக்கு கிழக்கில் மீள்குடியேற்ற நடவடிக்கைக்காக 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார்.

அதேவேளை இலங்கையின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பு வழங்குகின்ற தோட்டப் பிரதேச மக்களின் லயன் குடியிருப்புகளுக்கு பதிலாக 25000 வீட்டுத் திட்டங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

விளையாட்டுத் துறைக்காக பயன்படுத்தப்படும் சப்பாத்துக்கள் மீதான இறக்குமதி வரி இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்படும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

அதேநேரம் குளிர்பான தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படுகின்ற சீனியின் ஒரு வீத அளவுக்கு 50 சதம் வரி அறவிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேநேரம் மதுபானங்கள் மீது தேசியத்தைக் கட்டியெழுப்பும் வரி அறவிடப்படும் என்றும், அது 2018 ஏப்ரல் 1ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்றும் கூறினார்.

 

Leave a comment