கடற்படையின் அராஜகத்தால் காரைநகர் மடத்து வளவு மாதிரிகிராமத்துக்கு வரவிருக்கும் வீட்டுத்திட்டம் பறிபோகும் நிலை எற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.சிங்கள குடியேற்றத்தை நிறுவுவதற்கு கடற்படை எடுக்கும் முயற்சிகளை நிறுத்தி இது தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உரிய அதிகாரிகள் கடற்படைக்கு அழுத்தம் கொடுத்து பொதுமக்களின் காணியை மீட்டு தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரைநகர் மடத்து வளவு பகுதியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாதிரி கிராமம் அமைந்துள்ளது. இக் கிராமத்தில் போருக்கு முன்னரான காலப்பகுதியில் 44 வீடுகள் அமைக்கப்பட்டு மக்கள் வாழ்ந்து வந்தனர். போரின் காரணமா அவர்களுடைய வீடுகள் அழிவடைந்து காணப்படுவதுடன் தற்போது அப்பகுதியை கடற்படையினர் தம்வசம் வைத்துள்ளனர். அங்கு வசித்து வந்த மக்கள் வேறு இடங்களில் ஆங்காங்கே குடிசைகளில் தங்கி வாழ்ந்து வருகின்றனர்.
குறித்த மாதிரிக்கிராமத்தை அண்டிய 126 ஏக்கர் காணி தற்போது கடற்படையினர் வசம் உள்ளது. இதில் 76 ஏக்கர் நிலப்பகுதியை கடற்படை ஏற்கனவே சுவீகரித்துள்ளது. ஏனைய பகுதிகளை எந்த காரணமும் இன்றி தற்போதும் தம்வசம் வைத்துள்ளனர். அந்த பகுதியில் அண்ணளவாக 6 ஏக்கர் காணியே மேற்குறித்த மடத்து வளவு மாதிரி கிராமத்துக்கு சொந்தமானதாக உள்ளது.
இந்த நிலையில் இந்த வருடம் இந்திய அரசின் நிதி உதவியுடன் மாவட்டத்துக்கு தலா 5 லட்சம் பெறுமதியான 24 வீடுகள் வழங்கும் திட்டம் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு கிடைத்துள்ளது. அதில் யாழ் மாவட்த்துக்குரிய 24 வீடுகளை மடத்து வளவு மாதிரி கிராமத்துக்கு வழங்குவதற்காக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். பொதுமக்களும் தமது கிராமத்துக்கு செல்வதற்கு ஆயத்தமாக உள்ளனர். ஆனால் குறித்த பகுதியை இதுவரை கடற்படையினர் பொதுமக்களிடம் உத்தயோக ப10ர்வமாக கையளிக்காமல் முள்வேலி அமைத்து தம்வசம் வைத்துள்ளனர்.
எதிர்வரும் சில நாட்களுக்குள் இந்த வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்படவில்லை என்றால் குறித்த திட்டம் ஏனைய பகுதிக்கு கொடுக்க வேண்டிய துர்பாக்கிய நிலை தோன்றியுள்ளது.
இது தொடர்பில் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிதிகள் குறித்த கடற்படைக்கு அறிவித்துள்ளதாகவும் ஆனால் கடற்படை சாதகமான பதிலை வழங்கவில்லை என்றும் அதனால் தான் வீட்டுத்திட்ட வேலை தமதமடைகிறது என பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் தாம் தமது கிராமங்களை விட்டு அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம் அடிப்படை வசதிகளும் எமக்கு சரியன முறையில் பெற்றுக்கொள்ள முடியவில்லைகைவசம் எமக்கு பல தொழில் துறை இருந்தும் எமக்கென சொந்தமான வீடுகள் இலலாத காரணத்தால் அதை சரிவர மேற்கொள்ள முடியவிலலை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அத்துடன் குறித்த பகுதியை கடற்படை எந்த காரணமும் இன்றி தம்வசம் வைத்திருப்பதன் காரணம் சிங்கள மீனவ குடும்பங்களை அப்பகுதியில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் இரகசியமாக மேற்கொள்ளப்படுகிறதா என்ற சந்தேகம் தம் மத்தியில் தோன்றியுள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த விடயம் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் கடற்படைக்கு உடனடியாக அழுத்தம் கொடுத்து தமது காணியை மீட்டுத்தருவதுடன். வீட்டுத்திட்டத்தையும் பெற்றுத்தருமாறு கோரியுள்ளனர்.

