யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்தியர்களிற்கும் தாதியர்களிற்கும் அதிக வெற்றிடம்

391 0

வடக்கு மாகாணத்திலேயே ஒரேயொரு  போதனா வைத்தியசாலையாகவுள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்  வைத்தியர்கள் 49 பேரும் தாதியர்கள் ஆயிரம் பேருக்கும்  வெற்றிடம் நிலவும் நிலமையிலேயே   வைத்தியசாலைப் பணிகள் முன்னெடுப்பதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி    தெரிவித்தார்.

இது தொடர்பில் பணிப்பாளர்  மேலும் விபரம் தெரிவிக்கையில் ,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்போது வைத்தியர்களிற்கும் தாதியர்களிற்கும் அதிக வெற்றிடம் காணப்படுகின்ற நிலையிலேயே பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக 361 வைத்தியர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில் 312 வைத்தியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். இந்த நிலையில் 49 வைத்துயர்களிற்கு எமது வைத்தியசாலையில் மட்டும் வெற்றிடம் காணப்படுகின்றது.

இதேபோன்று தாதியர் வெற்றிடம் மிக அதிகமாகவே காணப்படுகின்றது. அந்த வகையில் போதனா வைத்தியசாலையின் முழுமையான பணிக்கு ஆயிரத்து 400 தாதியர் இருந்தால் மட்டுமே அச் சேவையினை முழுமையாக வழங்க முடியும் என்ற நிலையில் அச் சேவையினை 400 தாதியர் மட்டுமே இப்பணியை நிறைவு செய்கின்றனர்.

இதனால் முடிந்தளவு அனுமதிக்கப்பட்ட அளவிற்குள் மேலதிக நேர சேவையின் மூலமும் நிவர்த்திக்கப்படுகின்றபோதும் அதிக வேலைப் பழுவின் மத்தியிலேயே பணியாற்றுகின்றனர். தாதியர் வெற்றிடம் என்பது நாடு முழுவதுமே பிரச்சணையான ஓர் விடயமாகவே கானப்படுகின்றபோதும் குறித்த வெற்றிடம் எமது இடத்தில் சற்று அதிகமாகவே கானப்படுகின்றது என்றார்.

Leave a comment