மைத்திரியின் பிளாக்மெயில் – புகழேந்தி தங்கராஜ்

448 0

ms-3-1என்னுடைய ஆசைக்கு இணங்க மறுத்தாலோ வேறெவரையாவது திருமணம் செய்துகொள்ள முயன்றாலோ ரகசியமாக வைத்திருக்கிற உன்னுடைய நிர்வாணப் புகைப்படங்களை பகிரங்கமாக வெளியிடுவேன்… அதற்குப் பிறகு உன்னால் வெளியே தலைகாட்ட முடியாது’ -இத்தகைய மிரட்டல்கள் இன்றைய தேதியில் சர்வசாதாரணம். இதுகுறித்துக் குவிகிற புகார்களிலிருந்து இதை அறிய முடிகிறது.

இப்படியெல்லாம் மிரட்டுபவர்களைத் தேடிப்பிடித்துத் தண்டனை வாங்கித்தர காவல்துறையில் இருக்கிற தனிப்பிரிவு – ‘சைபர் கிரைம்’. (பாதிக்கப்பட்டவர்களிடம் நிஜமாகவே பரிவுடன் நடந்துகொள்கிறது இந்தப் பிரிவு.) நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி அந்த ஹைடெக் சமூக விரோதிகளை வலைவீசிப் பிடிக்கிறது – சைபர் கிரைம்.நிர்வாணப் படத்தை வெளியிடுவேன் கவர்ச்சிப் படத்தை வெளியிடுவேன் நீயும் நானும் சேர்ந்திருக்கும் படத்தை வெளியிடுவேன்…. என்றெல்லாம் மிரட்டி பிளாக்மெயில் செய்பவர்கள் யார்? அவர்களில் பெரும்பாலானோர் சமூக விரோதிகள்…. வக்கிரம் பிடித்த பொறுக்கிகள்….. போக்கிரிகள்…..!

வக்கிரம்பிடித்துத் திரிகிற பொறுக்கிகளும் சமூகவிரோதிகளும் போக்கிரிகளும் செய்கிற இப்படியொரு கீழ்த்தரமான வேலையை ஒரு நாட்டின் அதிபரே செய்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான் இருக்கிறது இலங்கை அதிபர் மைத்திரிபாலா சிறிசேனாவின் சென்றவார மிரட்டல்.இலங்கையின் இரு துருவங்கள் இலங்கை சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும்! இரண்டும் சேர்ந்து ஆட்சியமைத்து ஓராண்டு ஆகிறது. சு. கட்சியின் மைத்திரிபாலா – அதிபர். ஐ.தே. கட்சியின் ரணில் – பிரதமர். இந்த நொடி வரை மைத்திரியின் சுதந்திரக் கட்சியில்தான் மகிந்த மிருகமும் இருக்கிறது. அந்த மிருகத்தின் ஆதரவாளர்கள் தனிக்கட்சி ஆரம்பிக்கத் துடிக்கின்றனர்.

இப்படியொரு நிலையில் மாத்தறையில் நடைபெற்ற தங்களது ஆட்சியின் ஓராண்டு நிறைவு விழாவில் மைத்திரிபாலா பேசியிருக்கும் தொனி சிங்கள இலங்கையின் அசிங்க முகத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது.

‘தனிக்கட்சி ஆரம்பித்தால் அவர்கள் தொடர்பான ரகசியங்களை வெளியிடவேண்டியிருக்கும்…’
‘அதற்குப் பிறகு அவர்களால் நடுரோட்டில் நடக்க முடியாது….’
இதெல்லாம் யாரோ ஒரு தெருப் பொறுக்கி பேசியது அல்ல! சாட்சாத் இலங்கை அதிபர் மைத்திரிபாலா பேசியது.

ஆட்சி மாற்றத்துக்காக புதிய கட்சி தொடங்க முயற்சிக்கிறார்கள்….
அப்படித் தொடங்கினால் அவர்கள் வீதியில் நடக்க முடியாத நிலை ஏற்படும்….
இதுவரை வெளிப்படுத்தப்படாத ரகசியங்கள் வெளியிடப்படும்…..’
மைத்திரி இப்படிப் பேசியதாகக் கூறுகிறது – இலங்கையின் பிரதான தமிழ் நாளிதழ்.

‘புதிய கட்சியை அவர்கள் உருவாக்கினால் அவர்கள் தொடர்பாக மறைத்துவைத்திருக்கிற ரகசியங்களை வெளியிடுவேன்’ என்று மைத்திரி பேசியதாகச் சொல்கிறது பி.பி.சி.

‘புதிய கட்சி ஆரம்பிப்போம் என்கிறார்கள்…. முடிந்தால் ஆரம்பித்துப் பாருங்கள்..we will disclose what we have maintained as secrets and politically wipe out those who form new parties’ என்று மைத்திரிபாலா மிரட்டியதாகச் செய்தி வெளியிடுகிறது கொழும்பிலிருந்து வெளியாகும் DAILY MIRROR.

சந்தேகத்துக்கே இடமின்றி இது ஒரு அப்பட்டமான BLACKMAIL. அரசியல் கட்சிகள் அல்லது அதன் தலைவர்கள் இப்படியெல்லாம் ஒருவரை ஒருவர் மிரட்டுவது சகஜம்! ஆனால் ஒரு நாட்டின் ஜனாதிபதி…… இப்படியெல்லாம் பகிரங்கமாக மிரட்டுவதென்பது அரிதினும் அரிது. இத்தனைக்கும் தனது ஆட்சியை நல்லாட்சி என்றுதான் அழைத்துக் கொள்கிறார் மைத்திரிபாலா. அந்த நல்லாட்சியின் லட்சணம் இது!

வேறு யாரையாவது திருமணம் செய்தால் ஆபாசப் படத்தை வெளியிடுவேன் – என்று மிரட்டுகிற பொறுக்கித்தனமான ஒரு சமூக விரோதிக்கும் ‘தனிக்கட்சி ஆரம்பித்தால் உன்னைக் குறித்த ரகசியங்களை வெளியிடுவேன்’ – என்று மிரட்டுகிற மைத்திரிபாலாவுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு இப்படியெல்லாம் மிரட்டுகிற ஒரு அதிகாரப்பூர்வ சமூக விரோதியிடமிருந்து எப்படி நியாயம் கிடைக்கும்? அப்படிக் கிடைத்துவிடும் – என்று எப்படி நம்ப முடிகிறது இந்தியாவாலும் சர்வதேசத்தாலும்!

மைத்திரிபாலா செய்வது இரட்டைக் குற்றம்.
ஒன்று – பிளாக் மெயில் செய்வது.
இன்னொன்று – குற்றவாளிகள் என்பது தெரிந்தே அயோக்கியர்கள் சிலரைக் காப்பாற்றி வருவது அவர்களது குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை ரகசியமாக வைத்திருப்பது.

ஒரு சாதாரணக் குடிமகன் இப்படியெல்லாம் பகிரங்கமாக பிளாக்மெயில் செய்வதில்லை. மிரட்டுகிறவனுக்கும் மிரட்டப்படுகிறவனுக்கும் மட்டுமே அது தெரியும். புகார் கொடுக்கும் பட்சத்தில் தான் அப்படி மிரட்டப்பட்டதை மிரட்டலுக்கு உள்ளானவர் நிரூபித்தாக வேண்டும். மைத்திரிபாலாவின் மிரட்டல் பகிரங்கமானது. ஒரு பெரிய விழாவில் பெருந்திரளான மக்கள் முன்னிலையில் பிரகடனம் செய்யப்பட்டிருக்கிற பிளாக்மெயில்.

கட்சி ஆரம்பித்தால் ரகசியங்களை வெளியிடுவேன் – என்பது பிளாக் மெயில் என்றால் ‘அவர்கள் தொடர்பாக இதுவரை மறைத்துவைத்திருக்கிற ரகசியங்களை வெளியிடுவேன்’ என்று பேசியிருப்பது தெரிந்தோ தெரியாமலோ மைத்திரிபாலா கொடுத்திருக்கிற ஒப்புதல் வாக்குமூலம். யாரும் கேட்காமலேயே தானாகவே முன்வந்து இப்படியொரு வாக்குமூலத்தைக் கொடுத்திருக்கிறார் இலங்கையின் அதிபர்.

இந்த வாக்குமூலத்தின் மூலம் அரசியல் தலைவர்கள் சிலரது கடுமையான குற்றங்களை தானும் ரணிலும் மூடி மறைப்பதாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார் மைத்திரி. இந்த ஒரே காரணத்துக்காகவே ‘மைத்திரியே வெளியேறு’ என்று இலங்கையில் இருக்கிற எதிர்க்கட்சி குரல் கொடுக்க முடியும். இந்தியாவின் மனசாட்சியான சம்பந்தர்களும் சம்பந்தரின் மௌன சாட்சியான சுமந்திரன்களும் அப்படியெல்லாம் குரல் கொடுப்பார்கள் என்று தோன்றவில்லை.

இனப்படுகொலை செய்தவர்களையும் போர்க்குற்றவாளிகளையும் மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்தவர்களையும் பாதுகாக்கிற காவல்தெய்வங்கள் நாங்கள்தான் – என்று மைத்திரியும் ரணிலும் போட்டிபோட்டுக் கொண்டு அறிவித்தபோதே அதற்காக ஒரு வார்த்தை கண்டனம் கூட தெரிவிக்காத மெத்தப்படித்த மேதாவிகளிடமிருந்து இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா?

தேர்தலின் போதே ‘மகிந்தனையும் அவன் குடும்பத்தையும் மின்சார நாற்காலியிலிருந்து காப்பாற்றியது நாங்கள் தான்’ என்று பகிரங்கமாகப் பேசினார்கள் மைத்திரியும் ரணிலும்! அதைத்தான் இப்போதும் பேசுகிறார் மைத்திரி. அவர் பேசுவதும் புதிதல்ல! கொல்லப்பட்ட தன் இனத்தின் பிணக் குவியல் மீது அரியணை போட்டு அமர்ந்திருக்கிற சம்பந்தர் வாய் பொத்தி வேடிக்கை பார்ப்பதும் புதிதல்ல! (இந்த சமயோசிதத்தையும் ராஜதந்திரத்தையும் பாராட்டி கோபாலபுரத்திலிருந்து சம்பந்தருக்கு இன்னொரு பாராட்டுக் கடிதம் அனுப்பினாலென்ன கே.எஸ்.ஆர்.!)

தேர்தலின் போது சொன்னதைத்தான் மாத்தறையில் மேலதிக அழுத்தத்துடன் சொல்லியிருக்கிறார் மைத்திரி.
‘ஓராண்டாக என்ன செய்தீர்கள் – என்று எங்களைப் பார்த்துக் கேட்கிறார்கள். மின்சார நாற்காலி WAR TRIBUNAL ஆகிய வார்த்தைகளை அகராதியிலிருந்து நீக்கியிருக்கிறோமே அது சாதனையில்லையா’ என்று திமிரோடு திருப்பிக் கேட்டிருக்கிறார் மைத்திரி. இதற்கும் சம்பந்தர் தரப்பிலிருந்து மௌனம் ஒன்றே பதில்!

மின்சார நாற்காலியிலிருந்து நாங்கள்தான் மகிந்தனைக் காப்பாற்றினோம் – என்று ஓராண்டுக்கு முன்பே பேசினார்களே அதற்கு என்ன அர்த்தம் என்பதைத்தான் முதலில் கண்டுபிடிக்க வேண்டும். ‘மகிந்த ராஜபக்ச தான் இனப்படுகொலைக்கும் போர்க்குற்றங்களுக்கும் சூத்திரதாரி….. அதற்காக அந்த மிருகத்தை மின்சார நாற்காலியில் ஏற்றியிருக்க முடியும்….’ என்பதைத்தவிர வேறென்ன அர்த்தம் அதற்கு!

இப்போது WAR TRIBUNAL என்கிற வார்த்தையையே அகராதியிலிருந்து நீக்கிவிட்டோம்’ என்று மைத்திரிபாலா சொல்லியிருப்பது இலங்கை அரசு மடியில் மறைத்து வைத்திருந்த இன்னொரு பூனைக்குட்டியை அவிழ்த்து வெளியே விட்டிருக்கிறது. அதைப்பற்றிப் பேச வேண்டுமென்றால் விக்னேஸ்வரன் பற்றிப் பேசியாக வேண்டும். (‘விக்னேஸ்வரனை ஏசியாக வேண்டும்’ என்பதற்காகவே வேலைமெனக்கெட்டு எனக்கு மின்னஞ்சல் அனுப்புகிற வயசாளிகள் மைத்திரியின் வார்த்தைகளைக் கூர்ந்து படிக்க வேண்டும்.

பல்லாயிரக்கணக்கான தமிழ் உறவுகளைத் திட்டமிட்டுக் கொன்றுகுவித்த இலங்கை நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தைக் காரணம் காட்டி சர்வதேச விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றபோது அந்த நச்செலிக்குக் கிடுக்கிப்பிடி போட்டவர் வடமாகாண சபை முதல்வர் – நீதியரசர் – விக்னேஸ்வரன். சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (TRIBUNAL) ஒன்றை அமைப்பதின் மூலம் இலங்கை தொடர்பான விசாரணையில் சர்வதேசத்தை உள்வாங்க முடியும் – என்கிற விக்னேஸ்வரனின் யோசனை இலங்கையின் அடிவயிற்றைக் கலக்கியதால்தான் சென்ற ஆண்டு ஜெனிவா தீர்மானத்தைத் தானும் ஆதரிப்பதாக நாடகமாடியது இலங்கை. (அதற்குத் தாங்கள் தான் காரணம் – என்று ஜெனிவாவில் நாடகமாடியவர்களை நினைவிருக்கிறதா உங்களுக்கு!)

விக்னேஸ்வரனின் அறிவார்ந்த யோசனையை முறியடிக்க இலங்கை முயன்றது – என்பது இதுவரை இலங்கை வெளியிடாத ரகசியம். முதல்முறையாக அதை இப்போது தெரிவித்திருக்கிறார் மைத்திரி. விக்னேஸ்வரனின் உருப்படியான யோசனை குறித்து அப்போது ஒரு வார்த்தை பாராட்டாதவர்கள் அந்த யோசனையை முறியடித்தது தொடர்பான மைத்திரியின் வெளிப்படையான பிரகடனத்தைக் கண்டிக்கப் போவதுமில்லை.

மகிந்த மிருகத்தைக் கூண்டிலேற்றும்போது அந்த மிருகத்தைக் காப்பாற்ற முயலும் மிருகங்களையும் சேர்த்தே கூண்டில் ஏற்ற வேண்டும். அனைத்துலக காணாமல் போனோர் நாளான ஆகஸ்ட் 30 அன்று வன்னி மண்ணில் காணாமல் போன ஒன்றரை லட்சம் பேர் எங்கே என்று கேட்டுக் குரல் கொடுக்க உலகெங்கும் திரளும் ஒவ்வொருவரும் இதை நினைவில் கொள்ள வேண்டும்.

காணாமல் போனோருக்காக மட்டுமின்றி இனப்படுகொலையில் கொல்லப்பட்ட எமது உறவுகளுக்காகவும் சீரழிக்கப்பட்ட எமது சகோதரிகளுக்காகவும் இறப்பின் விளிம்புக்குத் திட்டமிட்டுத் தள்ளப்பட்டிருக்கும் விடுதலைப் போராளிகளுக்காகவும் சேர்த்தே ஆகஸ்ட் 30ம் தேதி குரல் கொடுப்போம். நமது குரல்இ மகிந்த மிருகத்துக்கும் தமிழின அழிவைக் காட்டி அந்த மிருகத்தை பிளாக்மெயில் செய்வதன் மூலம் எமது இனத்துக்கு நீதி கிடைக்க முட்டுக்கட்டையாக இருக்கிற மைத்திரிபாலாவுக்கும் பாடம் கற்பிக்கட்டும்…..
மௌன சாமியார்களாகவே வண்டி ஓட்டுகிற சம்பந்தர் போன்ற மகா பெரியவர்களும் அதிலிருந்து பாடம் கற்கட்டும்!இப்படிக் கூசாமல் பிரகடனம் செய்கிற ஒரு போக்கிரித்தனமான மனிதருக்குத்தான் பரிவட்டம் கட்டிக் கொண்டிருக்கிறது திருப்பதி தேவஸ்தானம். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கக் கூட வாயைத் திறக்க முடியவில்லை .