மேட்டூர் அணை கட்டும் பணியில் ஈடுபட்டவர்: 105 வயதை எட்டிப்பிடித்த தமிழன்

569 0

மேட்டூர் அணை கட்டி முடிக்க பெரும் பங்காற்றிய ஆங்கில பொறியாளர் எல்லீசுக்கு உதவியாக விளங்கிய கண்ணப்பன் (105) தற்போது ஈரோட்டில் வாடகை கூட கொடுக்க முடியாத நிலையில் வசித்து வருகிறார்.

தமிழ்நாட்டின் மிகப் பெரிய அணையாக திகழ்வது மேட்டூர் அணை. சேலம் மாவட்டத்தில் மேட்டூரில் உள்ள இந்த அணையால் தான் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வு உள்ளது.

மேலும் காவிரி ஆற்றின் அழகுக்கும் மேட்டூர் அணை தண்ணீர் தான் அழகு கூட்டுகிறது.

மேட்டூர் அணையை ஆங்கிலேயர்கள் கட்டினாலும் கட்டுவதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் நமது தமிழர்கள் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

மேட்டூர் அணை கட்டி முடிக்க பெரும் பங்காற்றியவர் ஆங்கில பொறியாளர் எல்லீஸ். இவருக்கு மேட்டூர் அணை கட்ட பலர் உதவியாளர்களாக இருந்தாலும் பொறியாளர் எல்லீசுக்கு பெரும் உதவியாக விளங்கியவர் பி.ஆர்.கண்ணப்பன். ஈரோடு பெரியார் நகர் பகுதியில் வசித்து வரும் இவருக்கு இப்போது வயது 105.

மேட்டூர் அணைக்கான அஸ்திவாரம் அமைக்கும் பணி தொடங்கியதில் இருந்து அணை கட்டி முடிக்கும் வரை தொடர்ந்து தன்னையே முழுமையாக ஆர்ப்பணித்து கொண்டவர். அணை கட்டி முடித்து 1943-ம் ஆண்டு திறப்பு விழாவின் போது சிறப்பாக அணை கட்ட பணி ஆற்றிய கண்ணப்பனுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும் புனல் மின் நிலையத்தில் பணி புரிய பணி நியமன ஆணையையும் ஆங்கில பொறியாளர் எல்லீஸ் வழங்கினார்.

இந்த நிலையில் கடந்த 21.11.2012-ம் ஆண்டு கண்ணப்பன் தனது 100-வது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்தார். தனது 105-வது வயதை வரும் (நவம்பர் மாதம்) 11-ந் தேதி குடும்பத்தினருடன் கொண்டாட உள்ளார்.

ஆங்கிலேயர் காலத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்த ஒரே காரணத்துக்காக அரசு சார்பில் வழங்கப்பட வேண்டிய எந்த ஒரு பணி பலன்களும் இதுவரை அவருக்கு வழங்கப்படவில்லையாம்.

பணியில் இருந்த போது அதாவது 1947-ல் ஈரோடு பெரியார் நகர் பகுதியில் தான் வசிப்பதற்காக வாங்கிய வீட்டை இப்போது விற்று பெரியார் நகரிலேயே ஒரு வாடகை வீட்டில் வாடகை கூட கொடுக்க முடியாத நிலையில் வசித்து வருகிறார்.

கண்ணப்பனின் முதல் மனைவி சரஸ்வதி பாய். இவர்களுக்கு தனலட்சுமி, வேதவள்ளி, குமரவேல் என 3 பிள்ளைகள். 1971-ல் ரத்தக் கொதிப்பு நோயால் சரஸ்வதி பாய் இறந்து விட்டார். மூத்த மகள் தனலட்சுமிக்கு இப்போது 75 வயதும், இளைய மகள் வேத வள்ளிக்கு 71 வயதும் ஆகிறது. மகன் குமரவேலுக்கு 65 வயதாகிறது.

மகள்கள் 2 பேரும் பெங்களூரிலும், மகன் சென்னையிலும் வசித்து வருகிறார்கள். இவர்கள் மூலம் 8 பேரன்- பேத்திகள், 7 கொள்ளு பேரன்-பேத்திகளும் உள்ளனர்.

முதல் மனைவிக்கு பிறகு கண்ணப்பன் தனம் என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டு ஈரோடு பெரியார் நகரில் வசித்து வருகிறார்.

கண்ணப்பன் கூறும் போது, ‘‘தற்போது 105 வயதாகும் எனக்கு போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன். மேட்டூர் அணை கட்ட பாடுபட்ட எனக்கு சொந்த வீடு கூட இல்லை. அரசிடமும் பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனக்கு அரசு சார்பில் ஏதாவது உதவி செய்தால் என் கடைசி காலத்தை இப்படியே ஓட்டி விடுவேன்’’ என்றார்.

வியக்கத்தக்க மாபெரும் மேட்டூர் அணை உயர எழும்ப காரணமாக இருந்த கண்ணப்பன் என்ற தமிழனுக்கு உதவி கிடைக்குமா?.

Leave a comment