நியூயார்க் மன்ஹாட்டன் தாக்குதல்: கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீது தீவிரவாத குற்றச்சாட்டுகள் பதிவு

292 0

நியூயார்க் மன்ஹாட்டனில் லாரியை ஏற்றி பொதுமக்களை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் மீது தீவிரவாத குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் உலக வர்த்தக மையம் உள்ளது. இதனருகில் ஒரு நபர் லாரியை ஓட்டிவந்து மக்கள் கூட்டத்தின் மீது வேகமாக மோதியதில் 8 பேர் பலியாகினர். மேலும் சிலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் சாய்ஃபுல்லோ சாய்போவ் என்ற நபரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். இந்த தாக்குதலுக்கு டிரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சாய்ஃபுல்லோ சாய்போவ் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டான். அவன் மீது தீவிரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின்  தூண்டுதலால் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை நடத்துவதற்காக சாய்ஃபுல்லோ சாய்போவ் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே திட்டமிட்டு இருந்தார் என்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இந்த பகுதியை அவர் திட்டமிட்டே தேர்ந்தெடுத்துள்ளார் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. இந்த  குற்றச்சாட்டு நிரூபணமானால் அவருக்கு மரண தண்டனை  விதிக்கப்படும்.

கைது செய்யப்பட்ட சாய்போவ்(26) உஸ்பெகிஸ்தானில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவன். அவனது செல்போனை ஆய்வு செய்தபோது அதில் 90 வீடியோக்கள், 3800 புகைப்படங்கள் இருந்ததாகவும், அவை பெரும்பாலும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடையவை என்றும் அரசு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே சாய்போவின் நண்பர் முகம்மதசூரி கேதிரோவிடமும் எப்.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அவருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லாமலும் இருக்கலாம் என்று அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு தங்களை ஆன்லைன் மூலம் பின்தொடரும் ஆதரவாளர்களை மூளைச்சலவை செய்து, வாகனங்கள், கத்திகள் மற்றும் எளிதில் கிடைக்கும் ஆயுதங்கள் மூலம் சொந்த நாட்டு மக்களைக் கொல்வதற்கு தூண்டுகிறது. அவ்வகையில், கடந்த ஆண்டு மத்தியில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் நடந்த வாகன தாக்குதல்கள் பலரை பலி வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment