ரத்துபஸ்வல சம்பவம் – வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

533 0

சர்ச்சைக்குரிய கம்பஹா ரத்துபஸ்வெல சம்பவம் தொடர்பிலான வழக்கு மீதான விசாரணை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 24ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்றைய தினம் கம்பஹா நீதவான் நீதிமன்றில் நீதவான் டி.ஏ ருவண் பத்திரண முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சியின் போது கடந்த 2013 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி சுத்தமான குடிநீரை பெற்றுதருமாறு கோரி அப்பகுதி மக்களால் ஆர்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

 

குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கையுறை தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் அசுத்தமான கழிவு நீர் நிலத்தடி நீரை மாசு படுத்தியுள்ளதாக தெரிவித்தும்,

குறித்த தொழிற்சாலையினை அகற்றி சுத்தமான குடிநீரை பெற்றுத்தருமாறும் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அத்துடன் குறித்த தொழிற்சாலையின் உரிமையாளரான தம்மிக்க பெரேரா அப்போதைய அரசாங்கத்தின் நம்பிக்கைக்குரியவர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆர்பாட்டத்தினை கட்டுபடுத்துவதற்கு காவல் துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதிலும் கழகம் அடக்கும் பிரிவினர், விசேட அதிரடிபடையினர், மற்றும் இராணுவத்தினரும் குறித்த பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதன்போது ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுபடுத்துவதற்காக கண்ணீர் புகை பிரயோகம், நீர் தாரை பிரயோகம், மற்றும் தடியடி பிரயோகம் ஆகிய மேற்கொள்ளப்பட்டதோடு துப்பாக்கி பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது ஆர்பாட்டத்தில் பங்கேற்றிருந்த மூவர் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் ரத்துபஸ்வெல சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது.

குறித்த குழுவானது மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் இருவர் துப்பாக்கி பிரயோகத்தினாலும், ஒருவர் தாக்குதலினால் படுகாயமுற்றும் உயிரழந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டது.

இதற்கமைய ரத்துபஸ்வெல சம்பவம் தண்டனைக்குரிய குற்றம் என கம்பஹா நீதவான் நீதிமன்றின் நீதிபதி காவிந்தியா நாணயக்காரவினால் கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

இதற்கமையவே முன்னாள் இராணுவ புலனாய்வு துறையின் மேஜர் உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் நால்வருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Leave a comment