அதிகாரப்பகிர்வு என்பது எந்தவொரு காரணத்துக்காகவும் குறைத்து மதிப்பிடப்படுவதாகவோ அல்லது மீளப்பெறக்கூடியதாகவோ இருக்கக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
அது நீண்டகாலம் நிலைத்திருப்பதை உறுதிப்படுத்தும் ஏற்பாடுகள் நாடுமுழுவதும் இருக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு சபையில் இன்று இடம்பெறும் விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பிரச்சினையானது உள்நாட்டில் தீர்க்கப்படவேண்டும்.
நாட்டின் மீதான சர்வதேச அழுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று தாங்கள் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரச்சினை அவ்வாறு உள்நாட்டில் தீர்க்கப்படாவிட்டால் இலங்கை மீதான சர்வதேச அழுத்தம் மேலும் வலுவடைவதை தவிர்க்கமுடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் உயரிய சட்டமான அரசியலமைப்பானது, பிரிக்கப்படாத நாடு சகலருக்கும் உரித்தானது என்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கவேண்டும்.
நாடு அபிவிருத்தியை நோக்கிச் செல்லக் கூடியதாகவும், நாட்டை அமைதியானதாக பேணக்கூடியதாகவும் இருக்கவேண்டும்.
இந்த முயற்சிகளை எவராவது குழப்புவார்களாயின் அதுநாட்டுக்குப் பாரியபாதிப்பை ஏற்படுத்தும்.
அவ்வாறானவர்கள் தேசிய நலனுக்காக அன்றி தனிப்பட்ட எதிர்கால அரசியல் நோக்கத்துக்காக குழப்பம் விளைவிப்பவர்களாகவே இருப்பார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.
முன்வைக்கப்படும் பரிந்துரைகள் பிரிக்கப்படாத நாட்டுக்குள் ஜனநாயகம், உரிமை, சகவாழ்வு மற்றும் ஒற்றுமை என்பவற்றை பலப்படுத்துவதாக அமைந்திருக்கவேண்டும்.
தேசிய மட்டம், மாகாணமட்டம் உள்ளுராட்சிமட்டம் என அதிகாரப்பகிர்வின் கீழ் மூன்று மட்டங்கள் உள்ளன.
இந்த மூன்று மட்டங்களிலும் அதிகாரங்கள் எவ்வாறு பகிரப்படவேண்டும் என்பது தெளிவாக குறிப்பிடப்படவேண்டும்.
புதிய அரசியலமைப்பை தயாரிப்பதாயின் பொதுவான விடயங்களில் தேசிய இணக்கப்பாடு அவசியமானது.
அதிகபட்சம் சாத்தியமான ஒருமித்த கருத்துக்களுடன் புதிய அரசியலமைப்பை தயாரிக்கவேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ்பேசும் மக்கள் சமஷ்டி அடிப்படையில் அதியுச்ச அதிகாரங்களைப் பகிரக்கூடிய தீர்வொன்றை எதிர்பார்க்கின்றனர்.
நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கில் பெடரல் கட்சியினால் முன்வைக்கப்பட்ட யோசனை வடக்கு, கிழக்கு மக்களால் 1956ஆம் ஆண்டே தோற்கடிக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் பலகோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதால் வன்முறைகள் அதிகரித்தன.
விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்கு உலகநாடுகளின் ஒத்துழைப்புப் பெறப்பட்டதாக சம்பந்தன் கூறியுள்ளார்.
யுத்தம் முடிவடைந்தபின்னர் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வொன்று முன்வைக்கப்படவேண்டும் என சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும்.
ஆகவே, அவ்வாறான தீர்வொன்றை முன்வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது கட்டாயமாகும்.
தேசிய பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டு மக்களின் அங்கீகாரத்துடன் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை ஒரு இனத்துக்கு மட்டும் சொந்தமான நாடு அல்ல.
இது பல்லின மக்கள் வாழும் நாடாகும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் என மூவினங்கள் மற்றும் பௌத்தம், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் என நான்கு மதங்களைக் கொண்ட நாடாகும்.
இலங்கை இரண்டு பிரதான மொழிகளை பயன்படுத்தும் நாடாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்துவதன் ஊடாகவே பல்லின மக்கள் வாழும் நாட்டில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் விரிசல்களுக்கு தீர்வு காண முடியும்.
அவ்வாறில்லாவிட்டால், அனைத்து மொழிகளினதும் சம உரிமையை ஏற்றுக்கொள்ளலாமல் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
காவல் நிலையத்தில் தமிழர் ஒருவர் முறைப்பாடு செய்யப்போகும்போது, சிங்கள மொழியில் முறைப்பாடை பதிவுசெய்துவிட்டு, இதை வாசித்துபார்த்து நடராஜா என கையெழுத்திடுங்கள் எனக் கூறுவது எந்தளவுக்கு நியாயமானது?
இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும், தமது தாய் மொழியில் கல்வி கற்கவும் அரச கடமைகளை நிறைவேற்றவும் மொழி தொடர்பான உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என ஜே.வி.பியின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
மதம் தொடர்பான சம உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.
எந்த மதத்தையும் குறைத்து மதிப்பிட்டு, தேசிய சமத்துவத்தை கட்டியெழுப்ப முடியாது.
அத்துடன், ஒவ்வொரு மதத்தினருக்குரிய கலாசார உரிமையையும் ஏற்க வேண்டும்.
இவ்வாறாக அனைத்து மக்களினதும் சம உரிமைகளை பேணுவதன் மூலமாகவே 21 ஆம் நூற்றாண்டில் மக்களிடையே சமத்துவத்தை பேண முடியும் என அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களின் இன, மத உரிமைகள் உறுதிப்படுத்தபட்டு, அவர்களை ஆட்சியின் பங்காளர்களாக்கும் முறைமை உருவாக்கப்பட வேண்டும்.
அவர்கள் இந்த நாட்டின் குடிமகன்கள் என்ற சம உரிமையை ஏற்கும் முறைமையை உருவாக்க வேண்டும்.
அவ்வாறான முறைமைகளை உருவாக்காவிட்டால், இனவாதம் மேலோங்குவதை எவராலும் தவிர்க்க முடியாது என்றும் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

