இரட்டைக் கொலையின் சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்தனர்!

314 0

ஏறாவூர், சவுக்கடி, முருகன் கோவில் வீதியில் கடந்த தீபாவளி தினத்தன்று இடம்பெற்ற தாய் மற்றும் மகன் இரட்டைக் கொலையின் சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்தனர். மேற்படி வீட்டில் இருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

மிருசுவில் வடக்கு கொடிகாமத்தைச் சேர்ந்த ஒருவரும் சவுக்கடி தன்னாமுனையைச் சேர்ந்த ஆட்டோ சாரதி ஒருவருமே கைது செய்யப்பட்டவர்களாவர்.

தீபாவளி தினமான கடந்த 18ஆம் திகதி, பீதாம்பரம் மதுவந்தி(23) மற்றும் அவரது மகன் பீதாம்பரம் மதுசான் (11) ஆகியோர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டனர்.

இதையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே பிரதான சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

பிரதான சந்தேக நபர், சவுக்கடியில் உள்ள உறவினரின் வீட்டுக்கு அடிக்கடி சென்றுவந்துள்ளார். இதன்போது, அவருக்கும் மற்றொரு சந்தேக நபரான சவுக்கடியைச் சேர்ந்த ஆட்டோ சாரதிக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

அவரது ஆட்டோவிலேயே மதுவந்தி மற்றும் மதுஷன் ஆகியோர் அடிக்கடி பயணித்துள்ளனர். தீபாவளி தினத்துக்கு முந்தைய தினம் தனது நகைகளை அடகு வைத்துப் பணம் பெற்று வருவதற்கும் இதே ஆட்டோவிலேயே பயணித்துள்ளார்.

இந்தப் பணத்தையும் மேலும் சில நகைகளையும் குறிவைத்தே சந்தேக நபர்கள் இருவரும் கொலைகளை அரங்கேற்றியுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற தினமே பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்திற்கு சென்று கொள்ளையிட்ட நகைகளை அடகு வைத்து 515,000 ரூபாய் முற்பணம் பெற்றுள்ளதுடன் அதிலிருந்து அவர் செலுத்த வேண்டிய வாகன தவணைப் பணத்திற்காக 170,000/= செலுத்தி இருப்பதாகவும் தெரியவருகிறது.

கொலையானவர்கள் இருக்கும்போதே வீட்டினுள் புகுந்து மறைந்திருந்ததாகத் தெரிவித்த பிரதான சந்தேக நபர், அவர்களை மயக்குவதற்காகவே தடியால் தலையில் தாக்கியதாகவும், அவர்கள் மயங்காததாலேயே அவர்களைக் கொலை செய்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அடகு வைக்கப்பட்ட திருட்டு நகைகளை, யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி பிரதேசத்தில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.

Leave a comment