பிரதேச செயலகங்களினால் கால்நடைகளை கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரங்களை விநியோகிப்பதற்கு கால்நடை மருத்துவர்களின் சிபாரிசு அவசியமாகும் என்பதுடன், கால்நடை மருத்துவர்களின் வேலை நிறுத்தம் இடம்பெறும் காலத்தில் பிரதேச செயலகங்களினால் அத்தகைய அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருப்பின் அவை எவ்வாறு வழங்கப்பட்டன என்பதைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.
அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய உணவு உற்பத்தி செயற்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு, மேற்கொள்ளப்படவுள்ள கொள்கை ரீதியிலான தீர்மானங்கள் மற்றும் செயற்படுத்தல் திட்டத்தினை தயாரித்தல் தொடர்பாக நேற்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு ஆலோசனை வழங்கினார்.
இதேவேளை, பசுக்களை கொலை செய்தல் பால் உற்பத்தி துறையில் பெரும் பாதிப்பாக காணப்படுவதனால் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ உள்ளிட்ட அமைச்சுகளின் செயலாளர்களும் ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
இதேவேளை, கால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அண்மையில் ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

