பாராளுமன்றத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்துவோம் என யார் அச்சுறுத்தினாலும், மக்களுடன் இணைந்து அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
ஐ.தே.க, சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சகல கட்சிகளும் அரசியலமைப்பு விவகாரத்தில் தமது நிலைப்பாடுகளில் விடாப்பிடியாக இருக்காது, நெகிழ்வுப் போக்குடன் செயற்பட்டு மத்திய நிலைப்பாடொன்றுக்கு வருவதன் ஊடாகவே அரசியலமைப்பை நிறைவேற்ற முடியும் என்றும் அவர் கூறினார். வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் அரசியலமைப்பு சபையில் முழுநாள் விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இரண்டாவதுநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அரசியலமைப்பை தயாரிப்பதற்கு இறுதி சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இரா.சம்பந்தனின் காலத்தின் பின்னர் ஒற்றையாட்சிக்கும், பௌத்த மதத்துக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் இணங்கக் கூடிய தலைமையொன்று ஏற்படாது. எனவே கிடைத்திருக்கும் இறுதிச் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி சகலருக்கும் நன்மையளிக்கக் கூடிய அரசியலமைப்பை நிறைவேற்றவேண்டும் என்றார்.
அரசியலமைப்பு விவகாரத்தில் அரசாங்கத்துக்குள் முரண்பாடு ஏற்பட்டிருப்பதாகக் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், எதிர்ப்புத் தெரிவிக்கும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியிலேயே பிளவு ஏற்பட்டுள்ளது. நாட்டுப்பற்றாளர்கள் எனத் தம்மைத் தாமே காண்பித்துக் கொள்பவர்கள் துவேசப்பற்றாளர்களாகவே இருக்கின்றனர் என்றும் குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், பாராளுமன்றத்துக்கு குண்டுவைப்போம் எனக் கூறும்போது, சுதந்திரக் கட்சியின் அதிகாரப் பகிர்வு தொடர்பான நிலைப்பாடு உறுதியாகும். இதுபோன்று எம்மை அச்சுறுத்த முடியாது. தமிழ் இளைஞர்கள் கொல்லப்படுவதை காணும்போது சந்தோஷமாக இருப்பதாகக் கூறியவர்களுடன் இணைந்தே விமல் வீரவன்ச கூட்டம் நடத்துகின்றார். அவ்வாறு கூறுபவர்கள் மிருகங்கள். அவ்வாறானவர்களின் நிலைப்பாட்டை தோற்கடிக்க வேண்டும்.
எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து அரசியலமைப்பை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிவிட்டு, முடிந்தால் குண்டு போடுமாறு சவால்விடுக்க வேண்டும்.
அரசாங்கத்துக்குக் காணப்படும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இல்லாமல் செய்வதற்கு சிலர் செயற்படுகின்றனர். எமது நிலைப்பாடுகளில் நாம் உறுதியாக இருக்கும்போது குண்டு போடுவதாகக் கூறியவர்களுக்கிடையில் பிளவு ஏற்படுகிறது. இனவாத, மதவாதத்தை மீண்டும் தோளில் சுமந்துகொண்டு நாட்டை தீயிட இடமளிக்க முடியாது.
தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்குக் கிடைத்திருக்கும் இறுதிச் சந்தர்ப்பம். இதுவரை காலமும் இனப்பிரச்சினையானது இரு பிரதான கட்சிகளாலும் உதைபந்து போலவே பந்தாடப்பட்டது. இதனை தீர்க்க கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை சகலரும் பயன்படுத்த வேண்டும் என்றார்.

