பிணை முறி தொடர்பில் இதுவரையிலும் வெளியான தகவல்கள் உள்ளிட்ட தொலைபேசி உரையாடல்கள் சில, இன்றைய தினம் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடிக்கு எதிரான குரல் என்ற அமைப்பின் இணைப்பாளர் வசந்த சமரவிங்க இதனை தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த குரல் பதிவு மத்திய வங்கியின் பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், தாம் கைது செய்யப்படுவதையோ அல்லது தமக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படுவதையோ தடுக்க, பணிப்புரை விடுக்குமாறு கோரி ஷனில் நெத்திகுமார என்பவரினால் நேற்று உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிணை முறி விநியோக மோசடி குறித்த விசாரணைகளில் சாட்வி வழங்கிய அனிகா விஜேசூரிய மற்றும் அவரின் சகோதரர் விஜித் விஜேசூரியவுக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு தம்மை கைது செய்ய தயாராவதாக தெரிவித்து அவர் இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு பேர்பெச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தினால் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள மொனார்க் குடியிருப்பு தொகுதியில் அதிசொகுசு குடியிருப்பு ஒன்று பெற்றுக்கொண்டமை தொடர்பில் அனிகா விஜேசூரிய, கடந்த தினங்களில் பிணை முறி தொடர்பான ஆணைக்குழுவில் சாட்சி வழங்கியிருந்தார்.
அவருக்கு ஷனில் நெத்திகுமாரினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், தாம் கைது செய்யப்படுவதை தடுக்க கோரி மனு தாக்கல் செய்துள்ள ஷனில் நெத்திகுமார, அந்த மனுவில் பிரதிவாதிகளாக காவல்துறைமா அதிபர், குற்றவிசாரணை திணைக்களத்தின்; பணிப்பாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை சுட்டிக்காட்டியுள்ளார்.

