புதிய அரசியல் யாப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில், ஒற்றையாட்சி என்ற விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியல் யாப்பு தயாரிப்பு பணியில் முக்கிய பங்கு வகிப்பவருமான ஜெயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
இடைக்கால அறிக்கை தொடர்பான அரசியலமைப்பு பேரவையினர் இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
ஒருமித்த நாடு என்ற அடிப்படையில் மத்திய சட்டவாக்க சபையாக நாடாளுமன்றம் இருக்கும்.
அதேநேரம் உப சட்டவாக்க சபைகளாக பல சபைகள் உருவாக்கப்படலாம்.
ஆனால் அவற்றுக்கு இறைமை இராது.
குறித்த உப சட்டவாக்க சபைகளை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடம் இருக்கும்.
இதன்படி ஒற்றையாட்சி என்பது உறுதிப்படுத்தப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாட்டில் ஆட்சியில் இருந்து கட்சிகளின் முன்னாள் தலைவர்கள் இழைத்த தவறுகளாலேயே தமிழ் மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டதாக ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்றைய அரசியலமைப்பு பேரவை விவாதத்தில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
இவ்வாறான தவறுகளாலேயே தமிழ் மொழியில் தேசிய கீதத்தைப் பாடுவதற்கு 67 ஆண்டுகள் தேவைப்பட்டது.
அதேநேரம் முழுமையான அதிகாரப்பகிர்வு விடயத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சி நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கிறது.
தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கைக்கு தமது கட்சி ஆதரவளிப்பதாலும், தாமும் ஆதரவளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
எனினும் 2000ஆம் ஆண்டு சந்திரிக்கா அரசாங்கத்தின் போது முன்வைக்கப்பட்ட அரசியல் யாப்புக்கான வரைவிற்கே தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் டிலான் பெரேரா கூறினார்.
காரணம், குறித்த வரையில் பௌத்த மத விடயத்தில் தலையிடாமல், அதிகாரப் பகிர்வில் மாத்திரமே அவதானம் செலுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

