வவுனியா பள்ளிவாசல் முன்பாக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கடைகள் அகற்றப்பட வேண்டும் என தெரிவித்து இளைஞர்கள் சிலர் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியாவில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கடைகள் மக்கள் போக்குவரத்துச் செய்வதற்கு இடையூறாக இருப்பதால் அதை அகற்றித்தருமாறு கோரியே கவனயீர்ப்பு மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் அரசியல் அழுத்தங்கள் காரணமாக கடைகள் அகற்றப்படாமல் இருப்பதாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
போராட்டம் முன்னெடுக்கப்பட்ட பகுதியில் பதற்ற நிலமை காணப்பட்டதால் பாதுகாப்புக்காக பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இக்கவனயீர்ப்பு கோராட்டம் குறித்து கடைகளுக்கு சொந்தமான வவுனியா பள்ளிவாசல் நிர்வாகம் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியாவில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான நிலத்தில் அமைந்துள்ள அனைத்து கட்டிடங்களும் அகற்றப்பட வேண்டும் என்றும், தாங்களே முன்நின்று குறித்த கடைகளை அகற்றி தருவோம் என்பதுடன் கடந்த காலத்தில் நகரசபையின் நகரபிதா கடைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறு வவுனியாவில் குளங்கள் உட்பட பல இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா பள்ளிவாசல் நிர்வாகத்தினர் குறிப்பிட்டனர்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா நகரசபையின் செயலாளர் ஆர்.தயாபரன் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்…..
குறித்த ஆக்கிரமிப்பு கடைகளில் 14 கடைகளுக்கு முன்னைய நகரசபையின் நகரபிதா அனுமதி வழங்கியுள்ளதாகவும், வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான நிலத்திலேயே இக்கடைகள் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

