அனிகா விஜேரத்னவின் மரண அச்சுறுத்தலில் அரசியல் தலையீடு இல்லை!

201 0

பிணைமுறி விவகாரத்தில் சாட்சியமளித்த அனிகா விஜேரத்னவுக்கு மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன என்பது தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவால் (சி.ஐ.டி) மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்கிறது எனவும், அவ்விடயத்தில் அரசியல் தலையீடு காணப்படவில்லை எனவும் பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனிதாவுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகள், அரசியல் தலையீட்டுக்கு உள்ளாகியுள்ளன எனவும், அதன் காரணமாக அவ்விசாரணைகளை நிறுத்துமாறோ அல்லது இடமாற்றுமாறோ அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன எனவும், செய்தி அறிக்கைகள் தெரிவித்திருந்தன.

இது தொடர்பாக விளக்கமளித்துள்ள பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட அத்தியட்சகர் ருவன் குணசேகர, அவ்வாறான தலையீடு காணப்படவில்லை எனத் தெரிவித்தார்.

இவ்வாண்டு ஜூலை மாதத்தில், பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளித்திருந்த, கொள்ளுப்பிட்டியிலுள்ள சொகுசுத் தொடர் மாடியொன்றிலுள்ள, கூரைமாடி வீட்டின் உரிமையாளரானஅனிகா விஜேசூரிய, குறித்த சொகுசு வீட்டை, மாதாந்தம் 1.45 மில்லியன் ரூபாய் செலவில், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் குடும்பம், வாடகைக்குப் பெற்றுக் கொண்டது எனவும், அதற்கான பணத்தை, பிணைமுறி விவகாரத்தில் சிக்கியுள்ள பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோஸியஸே செலுத்தினார் எனவும் அவர் வெளிப்படுத்தியிருந்தார். அத்தோடு, இது தொடர்பான செய்தி வெளியானதும், குத்தகைக்கான ஒப்பந்தத்தை அழிக்குமாறு, அர்ஜுன் அலோஸியஸ் கோரினார் எனவும், பின்னர், ரவி கருணாநாயக்கவின் மனைவியும், “பார்க்கும் வழியில் பார்த்துக் கொள்கிறேன்” என மிரட்டினாரெனவும், அவர் சாட்சியமளித்திருந்தார்.

அதன் பின்னர், அவருக்கான அச்சுறுத்தல், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் உறவினரால் விடுக்கப்பட்டது எனவும், அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் எனவும், சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment