ஆய்வுக்கு பின்னரே மதுபானங்கள் விற்பனை: ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு ‘டாஸ்மாக்’ நிர்வாகம் விளக்கம்

13841 0

ஆய்வுக்கு பின்னரே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது என்று ‘டாஸ்மாக்’ நிர்வாக இயக்குனர் கிர்லோஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

‘டாஸ்மாக்’ மதுபானங்களில் அமிலங்கள் கலக்கப்படுவதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்து ‘டாஸ்மாக்’ மேலாண் இயக்குனர் கிர்லோஷ் குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் இயங்கி வரும் இந்தியாவில் தயாராகும் ஒவ்வொரு அயல்நாட்டு மதுபான உற்பத்தி நிறுவனத்திலும், தமிழ்நாடு இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மது உற்பத்தி விதிகள் 1981-ன் படி, துணை கலெக்டர் நிலையில் கலால் மேற்பார்வை அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் மதுபானங்களை பாட்டில்களில் நிரப்பும் முன்பு, ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் மாதிரி எடுத்து, சென்னையில் அமைந்துள்ள தடய அறிவியல் துறையின் ஆய்வுக் கூட்டத்துக்கு சோதனைக்கு அனுப்புகிறார். இந்த தடய அறிவியல் ஆய்வுக்கூடம், இந்த மாதிரிகள் மதுபானம் சம்பந்தப்பட்ட இந்திய தரக்கட்டுப்பாடுகளை ஒத்துள்ளதா? அல்லது இல்லையா? என்று சான்று அளிக்கிறது.

இந்த சான்றிதழை பெற்ற பின்னரே கலால் மேற்பார்வை அலுவலர் மதுபானத்தை பாட்டில்களில் நிரப்பவும், விற்பனைக்கு ‘டாஸ்மாக்’ கிடங்குகளுக்கு அனுப்பவும் அனுமதி வழங்குகிறார்.

‘டாஸ்மாக்’ நிறுவனமும் அவ்வப்போது மதுபான கிடங்குகள் மற்றும் கடைகளில் இருந்து சில மதுபான மாதிரிகளை எடுத்து, தடய அறிவியல் துறைக்கு பரிசோதனைக்காக அனுப்புகிறது.

இந்த இனங்களிலும் தடய அறிவியல் துறை ‘டாஸ்மாக்’ நிறுவனத்துக்கு, பிராந்தி, ரம், விஸ்கி, ஜின், ஓட்கா, ஒயின், பீர் ஆகியவற்றிற்கான தரக்கட்டுப்பாட்டு தேவைகளை ஒத்துள்ளதா? இல்லையா? என தெரிவிக்கிறது. தடய அறிவியல் துறை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிகளில், மது செடிமென்ட் ஆகி உள்ளதா? ‘எத்தில் ஆல்கஹால்’ சரியான அளவில் உள்ளதா? இந்த மதுபானம் விற்பனைக்கு உகந்ததா? என தெரிவிக்கிறது.

தடய அறிவியல் துறைக்கு பரிசோதனைக்காக அனுப்பப்படும் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானம், பீர் மற்றும் ஒயின் ஆகியவை இந்திய தரக் கட்டுப்பாட்டின் தேவைகளுடன் ஒத்திருந்தால் மட்டுமே பாட்டில்களில் நிரப்ப அனுமதிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a comment