தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்

254 0

தமிழகத்தில் இன்று அல்லது நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை இலாகா அறிவித்து உள்ளது.

தென்மேற்கு பருவமழை காலம் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரியான காலத்தில் தொடங்கியது.

பொதுவாக தென்மேற்கு பருவமழை காலத்தில் கேரளா, கடலோர கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய பகுதிகளில் மழை அதிகம் இருக்கும்.இந்த காலத்தில் தமிழகம் மழை மறைவு பிரதேசமாக இருப்பதால் குறைந்த அளவிலான மழையையே பெறும். தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்தின் இயல்பான மழை அளவு 32 செ.மீ. ஆகும்.இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவை விட 31 சதவீதம் அதிகமாக தமிழகத்தில் பெய்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காலம் செப்டம்பர் மாதம் முடிவடைந்தாலும், அதன் தாக்கம் சிறிது நாட்கள் இருக்கும். அந்த வகையில், தென்மேற்கு பருவமழை காலம் தமிழகத்தில் நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில் அடுத்த 2 தினங்களுக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

தென்மேற்கு பருவமழை காலம் இன்றுடன் (நேற்று) நிறைவடைந்தது. வடகிழக்கு திசையில் இருந்து காற்று வீச தொடங்கி இருக்கிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் ஏற்பட்டு உள்ளது.

அனேகமாக அடுத்த 48 மணி நேரத்துக்குள் (இன்று அல்லது நாளை) தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளான தெற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது.

வானிலையை துல்லியமாக கணித்து சொல்லிவிட முடியாது. நாளை (இன்று) கூட வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. தென்கிழக்கு தமிழகத்தின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. வருகிற 27-ந் தேதி (நாளை) தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். அதேபோல், 28-ந் தேதி ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பும் உள்ளது.

காலை 8.30 மணியுடன் (நேற்று) முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ஸ்ரீவைகுண்டத்தில் 5 செ.மீ., சேரன்மகாதேவியில் 4 செ.மீ., அரண்மனைபுதூரில் 3 செ.மீ., சாத்தூர், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, உத்திரமேரூரில் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பொதுவாக வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் ஆண்டு மழைபொழிவில் 48 சதவீதம் மழையை தமிழகம் பெறுகிறது. அதாவது, இந்த காலத்தில் தமிழகம் 44 செ.மீ. மழை பெறுகிறது.

தமிழகத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை பெய்து பெரும்பாலான இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இயல்பான அளவை விட அந்த ஆண்டு 53 சதவீதம் அதிகமாக மழை பெய்தது.

ஆனால் 2016-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் இல்லை. இயல்பான அளவை விட 62 சதவீதம் குறைவாகவே மழை பெய்தது. இதனால் தமிழகம் அந்த ஆண்டு ஏமாற்றத்தை சந்தித்தது.

இந்த நிலையில் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளான தெற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளாவில் இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை 89 சதவீதம் முதல் 111 சதவீதம் வரை பதிவாக வாய்ப்பு இருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று ஆய்வுகூட்டம் நடந்தது.

ஆய்வு கூட்டத்தில் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சியில் 26-10-17 (இன்று) முதல் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து (குறைந்தபட்சம் 75 பணியாளர்கள்) பணியாற்றும் வகையில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடர்பான புகார்களை பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1913 மூலமும், கட்டுப்பாட்டு அறையில் உள்ள 044-25367823, 25384965, 25383694 25619206 மூலமும் வாட்ஸ்-அப் எண்கள் 9445477662 மற்றும் 9445477205 மூலமும் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

இக்கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் தகவல்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவித்து உடனுக்குடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், மாநகராட்சியின் வசமுள்ள 1,096 வாக்கி-டாக்கிகள் மூலம் தகவல் தொடர்பினை பரிமாறிக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாநகராட்சி வசமுள்ள 16 சுரங்கப்பாதைகள், நெடுஞ்சாலைத்துறை வசமுள்ள 6 சுரங்கப்பாதைகள் என மொத்தம் 22 சுரங்கப்பாதைகள் மற்றும் தண்ணீர் தேங்கும் இடங்களாக கண்டறியப்பட்ட இடங்களில் 60 உயர் அழுத்த டீசல் பம்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பருவ மழையின்போது தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 15 மண்டலங்களிலும் மொத்தம் 458 எண்ணிக்கையில் 5 அல்லது 7.5 குதிரைத்திறன் கொண்ட மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, தடையில்லா போக்குவரத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மழைநீர் பெருகும் தாழ்வான பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க 109 மீட்பு படகுகளும், மீட்கப்பட்ட பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்திட 176 நிவாரண முகாம்களும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு ஒரே நேரத்தில் 1,500 நபர்களுக்கு உணவு தயாரித்திட 4 பொது சமையல் கூடங்களும், பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்திட 44 நிலையான மற்றும் நடமாடும் மருத்துவ குழுக்களும், 50 அம்மா குடிநீர் மையங்கள் மூலம் மழைக்காலங்களில் பாதுகாப்பான தரமான குடிநீரை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

Leave a comment