ஜெயலலிதா மரணம் இயற்கையானது அல்ல: குடியாத்தத்தில் ஜெ.தீபா பேச்சு

240 0

ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது அல்ல. சி.பி.ஐ. மூலம் விசாரணை நடத்தினால் தான் உண்மையான நீதி விசாரணையாக இருக்கும் என ஜெ.தீபா பேசினார்.

வேலூர் மத்திய மாவட்ட எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில், ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு சி.பி.ஐ. விசாரணை கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.

இதில் ஜெ.தீபா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நான் பொறுப்புக்கு வர முதலில் தயக்கம் காட்டினேன். நீங்கள் அழைத்ததால் வந்தேன். ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகளை பூர்த்தி செய்யவே நான் அரசியலுக்கு வந்தேன்.

மிகப்பெரிய கடமையை என் மீது சுமத்தி உள்ளீர்கள். ஜெயலலிதா மரணத்தில் உண்மையை மக்களிடையே தெளிவுபடுத்த வேண்டிய கடமை எனக்கு உள்ளது. இதற்கு உண்மையான நீதி விசாரணை வேண்டும். சி.பி.ஐ. மூலம் விசாரணை நடத்தினால் தான் உண்மையான நீதி விசாரணையாக இருக்கும் என வலியுறுத்துகிறேன்.

ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது அல்ல. என்னை போயஸ் கார்டனில் இருந்து விரட்டினால் உண்மைகளை மறைத்து விடலாம் என என்னென்னவோ செய்தார்கள். அம்மாவின் மரணத்துக்கு நீதி வேண்டும். மக்களாகிய நீங்கள் அதனை பெற்றுத்தர வேண்டும். நீதி கேட்டு தொடங்கி உள்ள எனது பயணம் தொடர்ந்து நடைபெறும். நீதிமன்றம் வாயிலாக துரோகிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

நீதி கிடைக்க நீங்கள் அனைவரும் எனது பின்னால் வர வேண்டும். எனது கருத்தில் இருந்து, எடுத்துக்கொண்ட பயணத்தில் இருந்து பின் வாங்க மாட்டேன். அம்மா விட்டுச்சென்ற பணிகளை உங்களுக்காக தொடர்வேன். அ.தி.மு.க. என்ற அமைப்பு அழிந்து விடும் என்ற அச்சம் அனைவருக்கும் எழுந்துள்ளது. அதனை நான் விட மாட்டேன். இறுதிவரை காப்பேன். அம்மாவின் ஆன்மா என்னுள் இருந்து என்னை வழி நடத்துகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a comment