கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்கும் முடிவுக்கு வந்தேன்: ஈரோடு திரும்பிய தொழிலாளி பேட்டி

345 0

என்னை யாரும் கடத்தவில்லை, சிறுநீரகத்தை விற்கும் முடிவுக்கு நானே வந்தேன் என்று ஈரோடு திரும்பிய விசைத்தறி தொழிலாளி கூறினார்.

ஈரோடு காசிபாளையம் பகுதி காந்திஜி வீதியை சேர்ந்தவர் ரவி (வயது 44). விசைத்தறி தொழிலாளி.வாங்கிய கடனுக்காக சிறுநீரகத்தை பெற இவர் கேரளாவுக்கு கட்டாயப்படுத்தி அழைத்து செல்லப்பட்டதாக புகார் கூறப்பட்டது.

ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர், போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் ஆகியோர் அதிரடி நடவடிக்கை காரணமாக கேரளாவில் நடக்க இருந்த சிறுநீரக ஆபரே‌ஷன் தடுத்து நிறுத்தப்பட்டு ரவி மீட்கப்பட்டார்.கேரளாவில் இருந்து ஈரோடு வந்த ரவி இன்று காலை மாவட்ட கலெக்டரின் முகாம் அலுவலகத்துக்கு அழைத்துவரப்பட்டார். அவரது மனைவி சம்பூர்ணமும் உடன் இருந்தார்.

அப்போது ரவி நிருபர்களிடம் கூறியதாவது:-

என்னை யாரும் கடத்தி செல்லவில்லை. நிர்ப்பந்திக்கவும் இல்லை. நான் வாங்கிய கடன் பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன்.எனது வருமானமும், எனது மனைவி வருமானமும் கடனுக்கான வட்டியை கொடுக்கவே சரியாகப்போனது. அசலை கட்ட முடியவில்லை.

எனவேதான் கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்கும் முடிவுக்கு வந்தேன். என்னிடம் புரோக்கர் போனில்தான் பேசினார். சிறுநீரகத்தை விற்க 6 மாதத்துக்கு முன்பு பேசினார்.

சிறுநீரகத்தை தமிழகத்தில் ஆபரே‌ஷன் செய்து எடுக்க முடியாது என்று கூறினர். எனவேதான் என்னை கேரளாவுக்கு அழைத்து சென்றனர். இதற்கு நானாக விருப்பப்பட்டுதான் சென்றேன்.

சிறுநீரக ஆபரே‌ஷனுக்காக என்னை கடந்த 6 மாதமாக கேரள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். எனது உடலை பரிசோதனை செய்தனர். ரத்தம் எடுத்து பரிசோதித்தனர்.

எல்லாம் சரியாக இருந்ததால்தான் 24-ந் தேதி (நேற்று) ஆபரே‌ஷன் என்று கூறி இருந்தனர். எனவே தான் நான் நேற்று அங்கு சென்றேன்.

எனது மனைவிக்கு நான் சிறுநீரகத்தை விற்பதில் முதலில் இருந்தே பிடிக்கவில்லை. மறுப்பு தெரிவித்துக்கொண்டே இருந்தாள். அவள் எதிர்க்கிறாள் என்று தெரிந்ததும் அவளுக்கு தெரியாமல் காரியங்களை செய்தேன்.

அந்த வகையில்தான் நேற்றும் அவளுக்கு தெரியாமல் கேரளாவுக்கு சென்றேன். ஆனால் அவள் என்னை கட்டாப்படுத்தி அழைத்து சென்றதாக புகார் கூறிவிட்டாள். எனவே ஆபரே‌ஷன் தடுக்கப்பட்டு நான் மீட்கப்பட்டுள்ளேன்.இவ்வாறு ரவி கூறினார். கலெக்டர் முகாம் அலுவலகத்துக்கு ரவி அழைத்து வரப்பட்ட காட்சி.

Leave a comment