தனியார் பாலில் கலப்படம்: கருத்து தெரிவிக்க ஐகோர்ட்டு விதித்த தடையை நீக்க கோரி அமைச்சர் அப்பீல்

209 0

தனியார் பால் உற்பத்தியாளர் பற்றி கருத்து தெரிவிக்க விதித்த தடையை ரத்து செய்ய வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஐகோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்துள்ளார்.

தனியார் நிறுவனம் விற்பனை செய்யும் பாலில் கலப்படம் உள்ளது என்றும் இந்த பாலை குடிப்பவர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் வரும் என்றும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இதையடுத்து அமைச்சருக்கு எதிராக தனியார் பால் நிறுவனங்கள் வழக்குகள் தொடர்ந்தன. அதில், ‘தங்களது நிறுவனத்தின் பால் மற்றும் பால் பொருட்கள் குறித்து ஆதாரம் இல்லாமல் அமைச்சர் கருத்து தெரிவிப்பதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவதூறு கருத்து தெரிவித்ததற்காக தங்கள் நிறுவனத்துக்கு தலா ரூ.1 கோடியை இழப்பீடாக வழங்க அமைச்சருக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ‘ஆதாரம் இல்லாமல் தனியார் நிறுவனங்களின் பால் மற்றும் பால் பொருட்கள் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவிக்கக் கூடாது’ என்று தடை உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், தனியார் நிறுவனங்கள் தாங்கள் விற்பனை செய்யும் பாலை 3 மாதங்களுக்கு ஒரு முறை அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்றும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுகளை எதிர்த்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். அதில், ‘3 மாதத்திற்கு ஒரு முறை பால் மாதிரியை சம்பந்தப்பட்ட நிறுவனமே , அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தால், அந்த பாலின் தரம் குறித்த உண்மை விவரம் வெளிவராது.

ஏற்கனவே, காசியாபாத்தில் உள்ள மத்திய அரசின் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையை புறக்கணித்து விட்டு தனி நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

எனவே பால் மாதிரிகளை 3 மாதத்துக்கு ஒரு முறை பால் நிறுவனங்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதேபோல இந்த விவகாரத்தில், என்னை மிரட்ட வேண்டும் என்ற நோக்கில் எனக்கு எதிராக பால் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன.

சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் என்ற முறையில் எனக்கு வந்த புகார்களின் அடிப்படையில் தான் கருத்து தெரிவித்தேன். மேலும், சுப்ரீம் கோர்ட்டு பால் கலப்படம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறியுள்ளது. அதனடிப்படையில் அமைச்சர் என்ற முறையில் பொது மக்களை பாதுகாக்க எனது கருத்துகளை கூறினேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த மனுவில், பால் கலப்படம் குறித்து கருத்து தெரிவித்தபோது, தனியார் நிறுவனங்கள் பெயர் எதையும் குறிப்பிடவில்லை.

பொதுவாக தான் கருத்தை தெரிவித்தேன். ஆனால், பால் நிறுவனங்கள் குறித்து நான் கருத்து எதுவும் தெரிவிக்க கூடாது என்று ஐகோர்ட்டு விதித்துள்ள தடை உத்தரவானது, ஒரு குடிமகன் என்ற முறையிலும், அமைச்சர் என்ற முறையிலும் எனது பேச்சுரிமையை பாதிக்கிறது.
அதனால், கருத்து தெரிவிக்க தனி நீதிபதி பிறப்பித்த தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.இந்த மனு விரைவில் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.

Leave a comment