மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி 100 மையங்களில் அளிக்கப்படும். இதற்காக தனியார் நிறுவனங்களுடன் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறார்கள்.
குறிப்பாக கிராமப்புறங்களில் படிக்கும் மாணவர்களுக்கு நகர் பகுதிகளில் உள்ள பயிற்சி வகுப்பு வசதி கிடைப்பதில்லை. இதனால் அவர்களால் எவ்வித போட்டித் தேர்வையும் எதிர்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட்தேர்வை அரசு பள்ளி மாணவர்கள் சந்திக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. அதனால் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளியில் மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு போட்டித் தேர்வை எதிர்கொள்ள வசதியாக பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளன.
தமிழகம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் தொடங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பயிற்சியை கொடுக்க ஆசிரியர்களுக்கு ஐதராபாத்தில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது.
பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க இருக்கிறார்கள். டிசம்பர் மாதத்தில் இருந்து போட்டித் தேர்வு பயிற்சி வகுப்பு தொடங்கப்படுகிறது. இதற்காக மாணவ-மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த நிலையில் பயிற்சி அளிக்கும் தனியார் நிறுவனங்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் இன்று அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது குறித்து செங்கோட் டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல் கட்டமாக 100 மையங்களில் போட்டித் தேர்வு பயிற்சி அளிக்கப்படும். இதற்காக தனியார் நிறுவனங்களுடன் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு கொண்டு வரும் எந்த போட்டித் தேர்வாக இருந்தாலும் அதனை தமிழக மாணவர்கள் எளிதாக சந்திக்கலாம். இதற்காக முதல்-அமைச்சர் ரூ.20 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக நடந்த கூட்டத்தில் பள்ளிக் கல்வி முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், இயக்குனர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

