கிழக்கு மாகாணத்தில் அபகரிக்கப்பட்ட விவசாய காணிகளை விடுவிக்க வேண்டும் – எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

306 0

1 (154)கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் பலவந்தமாக அபகரிக்கப்பட்ட விவசாய காணிகளை உடனடியாக விடுவிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், விவசாயத்தை தன்னிறைவடையச் செய்ய வேண்டுமாயின் விவசாயிகளுக்கு தேவையான வசதி – வாய்ப்புக்களை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் -என்றார்.

அதேவேளை, தமிழ், முஸ்லிம் சகோதரர்களுக்கு சொந்தமான விவசாய காணிகள் அவர்களுக்குத் தெரியாமலேயே அபகரிக்கப்பட்டு அதனை காடுகள் என பிரகடனம் செய்யப்பட்டது. ஆகவே, அந்த வர்த்தமானி பிரகடனம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சரினால் நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விலங்குத் தீனி உற்பத்தி செய்தல் – விற்பனை செய்தல் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது:-

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த சட்ட மூலத்தை நாங்கள் வரவேற்கின்றோம். விலங்கினுடைய உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்தல் – விநியோகித்தல் போன்ற விடயத்தில் பல்வேறுபட்ட பிரச்சினைகளை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம். இவற்றுக்கான நிரந்தர தீர்வினை இந்த சட்டமூலம் நிறைவேற்றுவதன் மூலம் மாத்திரம் பெற்றுக் கொள்ள முடியாது.

கோழியினுடைய உணவை உற்பத்தி செய்வதற்கு மாத்திரம் ஒரு வருடத்துக்கு 4இலட்சத்து 50ஆயிரம் மெட்ரிக் தொன் சோளத்தை நாங்கள் இறக்குமதி செய்கின்றோம். இந்நாட்டில் அதனை உற்பத்தி செய்வதற்குத் தேவையான சகல வளங்களும் – வசதிகளும் இருக்கின்றன. சோளம் உற்பத்திக்கான நிலம், காலநிலை, நீர் என அனைத்து வசதிகளும் இங்கு உள்ள நிலையில் அதனை நாம் தொடர்ந்தும் இறக்குமதி செய்து வருகின்றோம்.

ஆகவே, எதிர்காலத்தில் சோளம் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்காக வேண்டி விவசாய அமைச்சு மாகாண விவசாய அமைச்சுடன் இணைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

சோளம் உற்பத்திக்கு தேவையான வசதிகள் – வாய்ப்புக்கள் – வளங்கள் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் உள்ளன. எனினும், அம்பாறை மாவட்டத்தில் காலம் காலமாக தமிழ், முஸ்லிம் மக்கள் நெல், சோளம் உற்பத்தி செய்த விவசாய காணிகள் இன்று காடுகள் என குறிப்பிட்டு அவர்களுக்குத் தெரியாமலேயே வர்த்தமானி மூலம் பிரகடனம் செய்துள்ளனர். அதனால் அந்த நிலங்களில் விவசாயம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆயிரக்கணக்கான அப்பாவி விவசாயிகள் தங்களுடைய விவசாய உற்பத்தியை மேற்கொள்ள முடியாதுள்ளனர். இவ்வாறான நிலை இருக்கும் போது எவ்வாறு விலக்கினுடைய தீனி உற்பத்தியை எம்மால் அதிகரிக்க முடியும்.

ஆகவே, இந்த காணிகளை விவசாயிகளுக்கு மீள கையளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பலாத்காரமாக பிரகடனம் செய்யப்பட்ட இந்த வர்த்தமானி அறிவிப்பு ரத்து செய்யப்பட வேண்டும். இந்த காணிகள் மீண்டும் விவசாயிகளிடம் கையளிக்கப்பட வேண்டும். அத்துடன் சோள உற்பத்தியை அதிகரிப்பதற்குத் தேவையான தொழிநுட்ப அறிவு- வசதிகளை அரசு வழங்க வேண்டும் என்றார்.