வாக்கு போடுபவர்களாக மட்டும் இருக்காது வாக்களித்தவர்களிடம் கேள்வி கேட்பவர்களாகவும் மக்கள் மாறவேண்டு! அமைச்சர் அனந்தி சசிதரன்

485 0

வாக்கு போடுபவர்களாக மட்டும் இருக்காது வாக்களித்தவர்களிடம் கேள்வி கேட்பவர்களாகவும் மக்கள் மாறும்போதுதான் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என, யாழ் மாவட்டத்தின் சிறந்த கூட்டுறவாளர்களை கௌரவித்தல் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள கூட்டுறவாளர்களது பிள்ளைகளுக்கான கௌரவிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய வட மாகாண கூட்டடுறவு துறை அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் கூறியிருந்தார்.

வட மாகாண பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை (22-10-2017) நடைபெற்ற இந்நிகழ்வானது யாழ்ப்பாணத்தில் உள்ள கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. அதில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்…

உண்மையில் இந்த நிகழ்வானது மிகவும் முன்மாதிரியாகதாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் இடம்பெற்றுள்ளது. 24 மாணவர்கள் தேசிய அளவில் பல்கலைக்கழக வாய்ப்பை பெற்று செல்வதற்கான ஒரு ஊக்குவிப்பாக உந்துதலாக இந்த செயற்பாடு அமைந்திருப்பதோடு ஏனைய சங்கங்களுக்கு முன்மாதிரியாக அமைகின்றது. கடந்த காலங்களிலும் இவ்வாறான ஊக்குவிப்பு நடவடிக்கைகள் இந்த அமைப்பினால மேற்ககொள்ளப்பட்டு வருவதை அறியும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

நூற்றிற்கு அறுபது விகிதத்தில் பெண்கள் உள்ள நிலையில் பல்கலைக்கழகத்திற்கும் அதிகமான பெண் பிள்ளைகள் தெரிவாகிச் சென்று கொண்டிருக்கின்றார்கள். உண்மையில் இது ஒரு மகிழ்சியான விடயமாகும். இன்னும் எமது சமூகம் முன்னேற்றத்தை அடைவதற்கான செயற்பாடாகவும் இமையத்தை தொட்டுவிடுவோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் செயற்பாடாகவும் இது அமைந்துள்ளது.
உயர்கல்வியை நோக்கி பயணிக்கின்ற மாணவர்களாக இருக்கட்டும் சாதாரண தரம், உயர்தரம் போன்ற தரங்களில் கல்விகற்று வரும் மாணவர்களாக இருக்கட்டும் உங்களுடைய கல்வியை மேம்படுத்துவதற்காக உங்களின் பின்னால் தியாகத்துடன் சேர்ந்த தந்தையினுடைய உழைப்பும் அர்பணிப்புடன் கூடிய தாயினுடைய உழைப்பும் இருக்கின்றது என்பதனை மறந்துவிடக்கூடாது.

கலை, கலாச்சார, பண்பாட்டு ரீதியில் ஏற்பட்டுள்ள மாற்றமானது இன்று எங்களுடைய சமூகத்தினை எங்கையோ கொண்டுபோய்க் கொண்டிருக்கின்றது. இதனை இன்றைய தலைமுறையினர் உணரத்தயாராக இல்லை. கூட்டுறவுத்துறையில் வருகின்ற சம்பளமென்பது ஏனைய அரச திணைக்களங்களாக இருக்கட்டும் அரசசார்பற்ற நிறுவனங்களாக இருக்கட்டும் ஒப்பீட்டு ரீதியில் மிகவும் குறைந்தளவேயான சம்பளமகவே இருக்கின்றது. இதனால் தான் நாங்கள் கூட்டுறவுத்துறைக்கு தகுதியான ஆட்களைச் சேர்க்க முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.

வட மாகாண சபைக்கு இதுவரை கூட்டுறவு தொடர்பான கொள்கைகள் வகுக்கப்பட்டிருக்கவில்லை. இப்பொழுதுதான் வடக்கு மாகாண சபையினுடைய கூட்டுறவு தொடர்பான கொள்கைகள் வகுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கடந்த மாதம்தான் தேசிய அளவிலான கூட்டுறவுக் கொள்கை தொடர்பில் தேசிய கூட்டுறவு அமைச்சர் கௌரவ றிசாட் பதியுதீன் தலைமையில் கொழும்பில் ஆராயப்பட்டது.
அனைத்து மகாணங்களையும் உள்ளடக்கியதாக தேசிய கொள்கை வகுக்கப்படும் நோக்கில் எமக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. வட மாகாணத்தின் புதிய கூட்டுறவு அமைச்சராக நான் அதில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. ஒவ்வொரு மாகாணத்திற்கும் சிறப்பு குணாம்சங்கள் இருக்கின்றது. எங்களுக்கு பொருந்துகின்ற கூட்டுறவுக் கொள்கையின் சில குணாம்சங்கள் இன்னொரு மாகாணத்திற்கு பொருத்தமில்லாததாக அமையலாம். ஏனென்றால் எங்களுடைய பண்பாடு, கலாச்சாராங்கள், எமது வாழ்க்கை முறைகள் எல்லாம் வித்தியாசமானதாக இருக்கின்றன. எனவே நாங்கள் இதனை உருவாக்க பிந்திய காரணத்தினால் அவர்களது கூட்டுறவு கொள்கை வகுப்பில் எங்களது கருத்துக்களை சொல்வதற்காக எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

கூட்டுறவில் இருக்கின்ற உங்களுக்குத் தெரியும் எல்லா மாவட்டங்களையும் விட யாழ் மாவட்டம்தான் முதன் முதலில் ஒரு பலமான கூட்டுறவு அமைப்பை கட்டியெழுப்பியிருந்தது. பின்னர் வட மாகாணம் தான் போரிற்கு முற்பட்ட காலத்தில் பெயர் சொல்லக்கூடிய அளவில் பலமானதாக இருந்திருக்கின்றது. ஏனைய மாவட்டங்கள் இவ்வாறு கூட்டுறவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கவில்லை. பலமானதாகவும் இருக்கவுமில்லை. அந்த இடத்தில் எனது வாய்ப்பு வந்தபோது நான் மிகத் தெளிவாக கூறியிருந்தேன் உங்களுடைய கொள்கைகள் எவ்வாறு அமைந்தாலும் அதை பின்னர் நாங்கள் ஆராய்வோம். ஆனால் ஒரு கொடிய யுத்தத்தில் முற்றுமுழுதான சொத்தழிப்பு, பொருளிழப்பு மற்றும் உயிரிழப்புகளை சந்தித்திருக்கும் மாகாணம் என்ற அடிப்படையில் வட மாகாணத்திற்கு விசேட கவனம் செலுத்தி விசேட பொது நிதியொன்றை உருவாக்குவதன் மூலம்தான் மிகவும் தாழ்ந்துபோயிருக்கும் எமது கூட்டுறவை கட்டியெழுப்ப முடியும். ஏனைய மாகாணங்களில் சாதாரண நிலையில் இயங்கிக்கொண்டிருக்கும் கூட்டுறவுடன் அழிவுப்பாதையில் சென்றுகொண்டிருக்கின்ற எமது கூட்டுறவினை ஒப்பிட்டு நீங்கள் கொள்கைகளை வகுக்க முடியாது என்பதையும் வலியுறுத்திக் கூறியிருந்தேன்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் போரால் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும் வட மாகணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களும் பாதிப்பிற்குள்ளாகியிருந்தது. அந்த வகையில் ஐந்து மாவட்டங்களையும் போரால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

உடுத்த உடையுடன் கையில் குழந்தைகளுடன் வெளியேறிய முள்ளிவாய்க்கால் யுத்தம் சொந்த சொத்துக்களையே கொண்டுவர முடியாத நிலையில் பொதுச் சொத்துக்களை எவ்வாறு கொண்டுவந்திருக்க முடியும் என்ற கேள்வியையும் நான் கேட்டிருந்தேன். இந்த இடத்தில் உங்களுக்கும் நாங்கள் ஒன்றை கூறவேண்டும். கூட்டுறவாளர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். புதுக்குடியிருப்பு நுகர்ச்சி சங்கமாக இருந்தாலும் அந்த சங்கத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் போரிற்கு முன்னர் ஒன்டரைக் கோடி ரூபா நெல் கொள்முதலுக்காக வழங்கப்பட்டிருந்தது. அதற்கமைய வாங்கிய நெல் சுதந்திரபுரம் பகுதியில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தது. அப்போது பாதுகாப்பு வலையமாக விளங்கிய அப்பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தில் அங்கிருந்த நெல்லை தூக்கிக்கொண்டு ஓடிப்போகும் நிலையில் யாரும் இருந்திருக்கவில்லை. மக்களும் அந்த நிலையில் இருந்திருகவில்லை. சங்கங்களும் இருந்திருக்கவில்லை.

நான் கூட்டுறவு அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் எல்லா சங்கங்களின் நிலை குறித்தும் ஆராய்ந்தேன். நுகர்ச்சி சங்கங்களில் பெற்றோல் நிரப்பு நிலையங்களை நடத்திவரும் சங்கங்கள்தான் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை ஐம்பது வீதமாவது கொடுத்து வருகின்றார்கள். ஏனைய சங்கங்கள் நட்டமடைந்து வெறுமனே உடைந்து போன கட்டிடங்களையும் காணிகளையும் வைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். அவர்களிடம் கூழற்சிக்கான நிதியில்லாமல் இருக்கின்றது.

எனவே நாங்கள் மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருக்கின்றோம் ஒட்டுமொத்த வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற பல்துறை சங்கங்கள் அவை விவசாய சங்கங்களாக இருக்கலாம் கடற்தொழிலாளர் சங்கஙகளாக இருக்கலாம் பனை அபிவிருத்தி சங்கங்களாக இருக்கலாம் எதுவாக இருந்தாலும் எல்லாவற்றிற்கும் நட்டஈட்டு நிதி கொடுக்கப்பட வேண்டும். அப்படி ஏற்பாடு செய்ய முடியாவிடில் வட்டியில்லா கடனாக குறிப்பிட்ட காலத்திற்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருக்கின்றோம். அந்த நிதிகள் வந்தால்தான் எங்களுடைய சங்கங்களை பலப்படுத்தி மீளவும் எமது கூட்டுறவை கட்டியெழுப்ப முடியும்.

திக்கம் வடிசாலை பிரச்சினை குறித்து பார்க்கும் போது நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் யாருடைய ஆட்சி நடந்தது என்பது குறித்து உங்களுக்கு தெரிந்திருக்கும். உடனடியாக சங்கத்தை பூட்டிவிட்டு அனைவரும் வெளியேறவேண்டுமென்று முதல் நாள் கூறப்பட்டது. இதனால் 56 உத்தியோகத்தர்களுடன் இயங்கிய அந்த சங்கம் தற்போது 23 பணியாளர்கள் நான்கு வருடங்களாக வேலையும் இன்றி சம்பளமும் இன்றி அவதிப்பட்டு வருகின்றார்கள். நாங்கள் எடுக்கும் அரசாங்க சம்பளத்தில் வீட்டுச் செலவை சமாளிக்க முடியாமல் கடும் பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கின்ற பொழுது ஒரு குடும்பத் தலைவராக வருமானம் எதுவுமின்றி எவ்வாறு வாழ்க்கையை கொண்டு நடத்த முடியும்?

வடக்கு மாகாணத்திற்குள் திக்கம் வடிசாலை வந்துவிடும் என்ற நம்பிக்கையில் அவர்கள்; இருக்கிறார்கள். கூட்டுறவின் மீதான சொற்ப நம்பிக்கையில் திக்கம் வடிசாலை இயங்குமாயின் தமது கடன்களை சீர்செய்துவிடலாம் என்று காத்திருக்கின்றார்கள். ஏற்கனவே அதிகாரங்கள் ஏதுமற்ற வடக்கு மாகாணத்திற்குரிய கூட்டுறவிலும் மத்திய அரசு மூக்கைநுழைத்துக் கொண்டிருப்பதானது இங்கு ஜனநாயகம் எந்தளவில் மதிக்கப்படுகிறது? இல்லை. அது நல்லாட்சி அரசாங்கமாக இருந்தாலும் அந்த நிலையே காணப்படுகின்றது. குறிப்பிட்ட தொழிலைச் செய்கின்ற சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற அராஜகமாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

ஆகவே ஒரு வலுவான போராட்டத்தை செய்வதன் மூலமே மத்தியில் இருப்போருக்கு அழுத்தங்களைக் கொடுக்க முடியும். அதற்கு ஒட்டுமொத்தமான மக்களும் ஆதரவினை வழங்குவதன் மூலமே தொடர்ந்து வரும் காலங்களில் இவ்வாறான தலையீடுகளைச் செய்யவிடாமல் எங்களுடைய வாழ்வையும் வளத்தையும் காப்பாற்றிக்கொள்ள முடியும். இன விடுதலைப் போராட்டத்தில் உங்களுடைய பங்களிப்பு எவ்வாறு இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். எனவே எங்களுடைய விடுதலை என்ற கோட்பாட்டிற்குள் வருகின்றவர்களை பொருளாதார ரீதியாக நலிவடையச் செய்து இந்த கூட்டுறவைச் சிதைப்பதன் ஊடாக மீண்டும் நாங்கள் நீதிக்கான போராட்டத்தை தொடரக்கூடாது என்பதில் அரசாங்கம் மிகத் தெளிவாக இருக்கின்றது.

அதேபோன்றுதான் தென்னிலங்கயில் இருந்து வருகின்ற வடிசாராயத்திற்கு தென்னிலங்கையில் அனுமதி கொடுக்கின்றார்கள். இங்கு ஒரு சமூகத்தின் வாழ்வாதாரம் அதன் பின்னணியில் குடும்பங்களின் வாழ்வாதாரம் எல்லாமே பின்னிப்பிணைந்திருக்கின்ற பொழுது கள்ளுத்தவறணைகளை பூட்டுவது என்று ஒரு அரச அதிகாரி தானே முடிவெடுக்கின்றார். யாருடனும் கதைத்து பேசாது பொது மக்களின் முறைப்பாடு காரணமாக பூட்டவேண்டுமென்று அவர் முடிவெடுக்கிறார். கூட்டுறவு துறையிடமும் கருத்து கேட்கவில்லை. காலம் காலமாக அந்த இடத்தில் இருந்த விற்பனை நிலையத்தை பூட்டவேண்டுமென்று முடிவெடுப்பதை ஏற்கமுடியாது.

தென்னிலங்கையில் இருந்து வருகின்ற சாராயம் என்பது வியாபாரம். அதன் பின்னால் பெரும் அரசியல்வாதிகள் தொழில் அதிபர்கள் எனப்பலரும் இருக்கின்றார்கள். அவர்கள் தங்களுடைய வியாபாரத்தை வடக்கிற்குள் சமுதாய சீர்கேட்டை ஏற்படுத்துவதற்காக கொண்டுவரலாம் அல்லது எவ்வாறு திணிக்கலாம் என்று முயற்சிக்கின்றார்கள்.
மகளிர் விவகாரத்திற்குள் வருகின்ற பிரச்சினைகள் எல்லாம் குடும்ப வன்முறயில் இருந்து துஷ்பிரயோகம் என அனைத்தும் தென்னிலங்கையில் இருந்து வரும் சாராயத்தினால்தான் வருகின்றதே தவிர கள்ளை பயன்படுத்தியவர்களால் வந்ததாக யாரிடமும் இருந்தும் முறைப்பாடு வரவில்லை. ஏனென்றால் அது ஒரு மென்பானமாக இருகப்பாதால் அது பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்திவிடவில்லை.

கள்ளுத்தவறணை தமது வீட்டுக்கு பக்கத்தில் இருப்பதை கௌரவப்பிரச்சினையாக பார்க்கும் சிலர் பொய்யான குற்றச்சாட்டுகளை வேண்டுமென்றே கூறிவருவதாகவே நான் பார்க்கின்றேன். தொழிலை செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள் என அனைத்து தரப்பினரது கருத்துக்களையும் கேட்க வேண்டும். அதைவிடுத்து ஒன்றிரண்டு பேர் கொடுக்கும் முறைப்பாடுகளை கொண்டு ஒரு சமூகத்தின் வாழ்வாதாரத்தினை முடக்கிவிட முடியாது.

அவ்வாறு மூடுவதாக முடிவெடுத்தால் அதற்கான மாற்றுத் தொழிலை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அல்லது அதுவரை வாழ்வாதார உதவிகளைச் செய்ய வேண்டும். இவை எதையும் செய்யாது அனுமதிதர முடியாது இந்த தொழிலை செய்ய முடியாது என்று கூறுபவர்களுக்கு எதிராக நீங்கள் ஜனநாயக ரீதியில் போராட முன்வர வேண்டும். அவ்வாறு நீங்கள் போராட முன்வந்தால் உங்களுக்குப் பின்னால் நாங்கள் நிற்போம். ஏனெனில் இது எங்களின் வாழ்க்கைக்கான போராட்டம். நாங்கள் வாழ வேண்டு என்பதற்கான போராடுகின்றோமே ஒழிய வசதியாக வாழவேண்டும் என்பதற்காக நாங்கள் பிழையான வழியில் செல்ல வில்லை. எனவே நாங்கள் எப்போதும் உங்களுடன் தோளோடு தோள் நின்று உங்களுடைய இந்த வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காக முன்நின்று சேவையாற்றுவோம். வெறுமனே நீங்கள் வாக்குப் போடுபவர்களாக மட்டும் இருக்காமல் வாக்களித்தவர்களிடம் கேள்வி கேட்பவர்களாகவும் மாறும் போதுதான் உங்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படும். உங்கள் அபிவிருத்தியும் நல்ல நிலையில் வரும். இவ்வாறு அமைச்சர் மேலும் பேசியிருந்தார்.

Leave a comment